தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பின் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதன்பிறகு மைசூர் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இன்று காலை பந்திப்பூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிறகு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்தார். பின்னர் யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்ததோடு யானைகளின் பாகன்களை சந்தித்து உரையாடினார். பின்பு இங்கு வர முக்கியக் காரணமாக இருந்த ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து பாராட்டி அவர்களிடம் உரையாடிவிட்டு சாலை மார்க்கமாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு காரில் சென்று பின்பு அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூருக்கு புறப்பட்டுச் சென்றார்.