மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
பிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே அடைத்து கொண்டுவரும் பிளாஸ்டிக்கிற்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களையும் மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வாதிடப்பட்டது.
இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அரசாணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன என்றும் கூறினார். ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க உத்தரவிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இந்த அரசாணையை உறுதி செய்ய வேண்டும் என அவர் வாதிட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா ,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி வினியோகம் என அனைத்திற்கும் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை செல்லும் எனவும், அரசாணையை எதிர்த்து தொடர்ந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் பாட்டில்களில் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிளாஸ்டிக் தடை அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தனர்.