தண்ணீரின் நச்சுத்தன்மையை அகற்றி நீர்நிலைகளின் கரைகளில் மண் சரிவை தடுக்க வெட்டிவேர் நடப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஒட்டங்காடு, நாடியம், குருவிக்கரம்பை ஆகிய கிராமங்களில் இளைஞர்களின் முயற்சியில் சொந்த செலவில் நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பலகுளங்கள் காவிரித் தண்ணீரை நிரப்பி பாசனம் செய்யப்படுகிறது.
இந்த வகையில் முதலில் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரியகுளம் ஏரியை கைஃபா நண்பர்கள் சீரமைத்து கரைகளை பலப்படுத்தி நடைப் பயிற்சிக்கு ஏதுவாக கரைகளை சாலைகளாக அமைத்து நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கி உள்ளனர். மேலும் புதிய மண் என்பதால் அரிப்பு ஏற்படும். அதனை தடுக்க வெட்டி வேர் நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம். தண்ணீரும் நச்சுத்தன்மை இல்லாமல் இருக்கும் என்றனர் அனுபவமிக்க விவசாயிகள்.
இதனை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.. இளைஞர்களின் முயற்சிக்கு கை கொடுக்கும் விதமாக 25 ஆயிரம் வெட்டி வேர் நாற்றுகளை தனது சொந்த செலவில் அனுப்பி வைத்தார். அந்த வேர்களை பெரியகுளம் ஏரிக்கரையில் நடும் பணியில் கைஃபா நண்பர்களுடன் தன்னார்வலர்கள், தன்னார்வ பெண்கள், மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கரைகளில் பனை விதைகளும் புதைக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலனாக காவிரித் தண்ணீர் பெரிய குளம் ஏரியை நோக்கி வரத் தொடங்கிவிட்டது. அதனைப் பார்த்த இளைஞர்கள் மலர் தூவி வரவேற்றதுடன் ஏரியில் தண்ணீரை நிரப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எதற்காக இத்தனை பாடுபட்டோமோ அந்த கஷடங்களை போக்கும்விதமாக காவிரித் தாய் ஏரிக்கு வந்துவிட்டாள்.. அதை பார்க்கும் போது இத்தனை நாள் பட்ட கஷ்டங்களும் மறைந்து போகிறது என்றனர் மகிழ்ச்சியாக.