குடிநீர் விநியோகம் செய்யும் குழாயிலிருந்து எலும்புத் துண்டுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வெளியானது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
கோவை மேட்டுப்பாளையம் 21வது வார்டு கொண்டையூர் பகுதி குடியிருப்பில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாகவே தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். எதனால் குடிநீரில் துர்நாற்றம் வருகிறது என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்க கட்டப்பட்ட தொட்டியில் இருந்து கீழே வரும் குடிநீர் குழாய்களை குழி தோண்டி மாநகராட்சி அதிகாரிகள் பார்த்த பொழுது அதில் எலும்பு துண்டுகளும் இறைச்சி கழிவுகளும் வந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஒருவேளை குடிநீர் தொட்டியில் பறவை ஏதேனும் விழுந்து உயிரிழந்து அதன் எலும்புகள், இறைச்சி கழிவுகள் குழாயில் வெளியேறியதா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மாநகராட்சி குடிநீர் விநியோகத்தில் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வந்தது 21வது வார்டு கொண்டையூர் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.