நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விலை உயர்வுக்கு காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், விலை உயர்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடைகட்டி தூக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் முத்து, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரர், செந்தில், அமுதா, அஷ்ரப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோல் பரங்கிப்பேட்டையில் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.