Skip to main content

கோவிலுக்குச் சொந்தமான இடத்தை அபகரித்த கும்பல்; அதிரடி நடவடிக்கையில் கலெக்டர்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Petition to the Collector for confiscating the land belonging to the temple

திண்டுக்கல்லில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கொண்டதாக மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஒரு புகார் மனுவை கொடுத்து இருக்கிறார்.

அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டம், ஒருதட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு உத்தமநாச்சியப்பன் திருக்கோவில் பக்தர் நான். இந்தத் திருக்கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவேன். மேலும் என்னைப் போல் பல நபர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் 12.01.2024 ஆம் தேதியன்று  உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு வழிபட சென்ற போது அங்கிருந்த சிலர்  திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விற்பனைக்காக உள்ளது என்றும், அதனை வாங்குவதற்கு யாரேனும் இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு  கோவிலின் பூசாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் கூறிய போது, அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அது தொடர்பானவற்றை அருகாமையில் விசாரித்த போது,  உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு பாப்தியப்பட்ட சர்வே எண்: 44/6ல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஒருதட்டு கிராமத்தில் 0.97.00 ஏர்ஸ் இடம் உள்ளது.

இந்த இடம் ஆதியிலிருந்தே உத்தமநாச்சியப்பன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்டு  திருக்கோவில் பூசாரிகள் என்ற பெயரில் ஆதியில் பட்டாவும் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் வரக்கூடிய வருமானத்தை வைத்தே திருக்கோவிலுக்கு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தது என்றும் தெரிந்தது.

பின் அது தொடர்பான அரசு வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களை பார்த்த போது மேற்படி கட்டிமானது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் வட்ட பட்டா எண்: 2178-இன் படி உத்தமநாச்சியப்பன் கோவில் பூசாரிகள், சுப்பைய மூப்பர் மகன் சடைய மூப்பர், சுப்பைய மூப்பர் மகன் நாகப்பன், சுப்பைய மூப்பர் மகன் கிட்ட மூப்பன், சுப்பைய மூப்பர் மகன் சின்னைய மூப்பன் ஆகியோர்கள் பெயரில் இருந்தது. இந்த நிலையில் அதனைக் கொண்டு மேற்படி கூட்டுப்பட்டாதாரர்களில் ஒருவரான சுப்பையா மூப்பர் மகன் சின்னையா மூப்பர் என்பவர் தனது மகன் செல்லத்துரை என்பவருக்கு பொதுவில் பிரிவினை இல்லாத 5இல் ஒரு பாகமான செண்டு 61 உள்ள இடத்தினை தான செட்டில்மெண்ட்டாக நிலக்கோட்டை சார்பதிவக ஆவண எண்:2587/2020- இன் படி கிரையம் கொடுத்தது போன்றும், அதனைக் கொண்டு செல்லதுரை என்பவர் அவரது வாரிசுதாரர்களான கேசவராஜா, பவானி ஆகியேர்களுடன் சேர்ந்து, நிலக்கோட்டை சார்பதிவக ஆவண எண்:3058/2020ன்படி திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் கணேஷ் பிரபு மற்றும் அவரது மனைவியும், அரசு ஆசிரியையுமான செல்வி ஆகியோர்களுக்கு கிரையம் கொடுத்தது போன்றும்,

அதே போன்று  காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ்பிரபு மற்றும் அவரது மனைவியும், அரசு ஆசிரியையுமான செல்வி ஆகியோர்கள் நிலக் கோட்டை சார் பதிவக ஆவண எண்: 81/2022 இன் படி மேற்படி செல்வியின் மாமனாரும், மேற்படி .கணேஷ்பிரபு அவர்களின் தகப்பனாருமான .பழனிசாமி என்பவருக்கு கிரையம் கொடுத்தது போன்றும், அதே போன்று மேற்படி சின்னையா மூப்பர் என்பவர் மேற்படி திருக்கோவிலுக்கு சொந்தமான 48 செண்டு இடத்தினை தனது மற்றொரு மகனான நாகராஜன் என்பவருக்கு நிலக்கோட்டை சார்பதிவக ஆவண எண்:80/20 22 இன் படி தான செட்டில் மெண்ட் மூலம் கொடுத்து அதனைக் கொண்டு மேற்படி நபர்கள் தங்களது பெயர்களை நிலக்கோட்டை வருவாய் வட்ட பட்டா எண்:5236ல் சேர்த்துள்ளது போன்று உள்ளது.

இதனைப் பார்க்கையில்  திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தினை, மேற்படி திருக்கோவிலின் பூசாரி என்கிற அடிப்படையில் சின்னையா மூப்பர் தனது மகன்களான செல்லதுரை மற்றும் நாகராஜன் ஆகியோர்களுக்கு, பதிவு அலுவலர் முன்பு தவறான தகவல்களை தெரிவித்து மோசடியாக பதிவு செய்துள்ளார். அதனைக்கொண்டு வருவாய்த்துறை ஆவணங்களிலும் அவர்களது பெயரையும் அதன் மூலம் கிரையம் பெற்றவர்கள் பெயரையும் சேர்த்துள்ளார். ஆகையால் கனம் சமூகம் ஐயா  போலியான ஆவணங்களைத் தயார் செய்து அதன் அடிப்படையில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரித்துள்ள மற்றும் அதனைப் பிறருக்கு விற்பனை செய்த மற்றும் தற்போது விற்பனை செய்ய முயற்சிக்கும் பழனிச்சாமி மீதும் தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

இந்தப் புகார் மனு சம்மந்தமாக அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யவும் மாவட்ட கலெக்டர் பூங்கொடி அதிரடி உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.

சார்ந்த செய்திகள்