/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-high-court_14.jpg)
மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பாதிப்புகள், பொருளாதார இழப்புகளை மற்றும் இடர்களை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதார்ர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், உணவுப் பொருள் வழங்கல் துறையின் புள்ளி விவரங்கள் படி, மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அனைத்து வகையான பொருட்களும் பெறும் 1 கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 633 அட்டைகளும்; 18 லட்சத்து 31 ஆயிரத்து 838 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குடும்ப அட்டைகளும்; 3 லட்சத்து 84 ஆயிரத்து 626 சர்க்கரை குடும்ப அட்டைகளும்; 53 ஆயிரத்து 864 எந்த பொருளும் வேண்டாம் என்று பெற்ற குடும்ப அட்டைகளும்; 59 ஆயிரத்து 248 காவல் துறை குடும்ப அட்டைகளும் உள்ளன. தற்போது அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்து இருக்கும் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4,153 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரிசி பெறும் அட்டைதாரர்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், மத்திய மாநில அரசு நிறுவனங்களான மின்சார வாரியம், , பி. எஸ், என், எல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து நிறுவனங்கள், நீதித்துறையினர், ஊழியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேற்படி துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித சம்பள குறைப்பும் இன்றி சம்பளம் வழங்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவர்களுக்கு சவுகரிய குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் வருமான இழப்பு இல்லை.
அதனால், மத்திய - மாநில அரசு துறைகள், பொதுப் பணித்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே, பிஎஸ்என்எல், எண்ணெய் நிறுவனங்கள், இன்சூரன்ஸ், தபால் துறை உட்பட அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு நிதி பெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணி புரிபவர்களுக்கும் இந்த துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் பயனாளிகளாக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆர்.சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)