Skip to main content

ரூ. 100 கோடிக்கான போலி வரைவோலைகள்! - ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Person who fraudulent with  Fake drafts worth Rs 100 crore  has been arrested!

 


ரூ. 100 கோடிக்கான போலி வரைவோலைகள் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஆண்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (61). பாச்சிக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார். இவர், கோவையைச் சேர்ந்த ராயல் கேர் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக அதன் தலைவர் டாக்டர் மாதேஸ்வரனிடம் ரூ. 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு கமிஷன் தொகையாக ரூ. 2.85 கோடியை முன்பணமாக பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. 

 

அந்தப் புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மாநகர துணை ஆணையர் (குற்றம்) பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பன்னீர்செல்வம் தேடப்பட்டார். கடந்த மாதம் இறுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று சென்னை அடையாறு வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஆண்டிகுளத்தில் உள்ள வீடு மற்றும் மற்றொரு வீடு, அலுவலகம், பண்ணை, பெட்ரோல் நிலையங்களில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.

 

சோதனையில் ஏராளமான (பல கோடிக்கான) நிரப்பப்படாத முத்திரைத்தாள்கள், புரோ நோட்டுகள், காசோலைகள், பல நபர்களுடன் பெற்ற ஒப்பந்த ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஆனால் ஒரே ஒரு இரும்பு பெட்டகம் திறக்க முடியாததால் பூட்டைத் தயாரித்த நிறுவனத்தின் உதவியைப் போலீசார் நாடினார்கள். அவர்களாலும் திறக்க முடியாததால், மும்பையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்துள்ளனர். 

 

அதேபோல், வருவாய் துறையினர் முன்னிலையில் அறைகளைப் பூட்டி சீல் வைத்த போலீசார், சீல் வைக்கப்பட்ட அறைக்கு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் கோவை போலீசார் மற்றும் ஆலங்குடி போலீசார் இரண்டு தரப்பிலிருந்தும் 6 போலீஸார் துப்பாக்கியுடன் கடந்த 6ஆம் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 நாட்களாக பெட்டகம் திறக்கும் மும்பை குழுவினர் வரவில்லை.

 

Person who fraudulent with  Fake drafts worth Rs 100 crore  has been arrested!

 

இந்த நிலையில், தனிப்படை போலீசார், சென்னையில் முகாமிட்டு தேடிவந்தனர். கடந்த 14ஆம் தேதி, பல கோடிகளை மோசடி செய்த பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருந்த செல்வகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு சொகுசு கார்கள், மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயருக்கு அகமதாபாத் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்டதாக ரூ. 49.85 கோடி மற்றும் ரூ. 49.95 கோடிக்கான போலி வரைவோலையும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வம், அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய இருவரையும் கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டு ஆலங்குடி அழைத்துவரப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

இந்த பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே கள்ளநோட்டு மாற்றிய வழக்குகள், கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்குகள் என ஆலங்குடி, புதுக்கோட்டை, நமணசமுத்திரம், சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் உள்ளன. மேலும், கள்ளக்குறிச்சி மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பிக் கேட்டபோது ரூ. 5 லட்சத்திற்கு கள்ளநோட்டு கொடுத்து மோசடி செய்த வழக்கு என தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த மரக்கடை தினேஷ் என்பவருக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 1.33 கோடி கமிஷனாக பெற்று மோசடி செய்ததாக ஒரு வழக்கும் பதிவாகியுள்ளது.

 

மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களை தனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு, மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு, ஒரே வீட்டில் வசித்துக்கொண்டே தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டுவருவதாக போலீசார் கூறுகின்றனர். திறக்கப்படாமல் இருக்கும் இரும்பு பெட்டகம் திறக்கப்படும்போது கூடுதல் ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்