
துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் வந்துள்ளார். திருச்சி விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர் சோதனைகள் முடிந்து சொந்த ஊருக்கு புறப்படுவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் அவரை மடக்கி ஆட்டோவில் ஏற்றி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுகன்யா மற்றும் செல்வகுமாரின் உறவினர்கள் ஆட்டோவை மடக்கி பிடிக்க முயற்சி செய்தும் பிடிக்க முடியாமல் போக, திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த விமான நிலைய காவல் துறையினர் கடத்தப்பட்ட செல்வகுமார் எங்கே என்று விசாரணை நடத்தினர். அப்போது விமான நிலையத்திற்கு அருகே உள்ள தனியார் விடுதியில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டுள்ளனர்.
மேலும் அவரை அடைத்து வைத்து இருந்த மர்ம ஆசாமி யார் என்று விசாரித்தபோது அவர் விமானநிலைய பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பது கண்டறியப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில் துபாயில் இருந்து புறப்பட்ட செல்வகுமாரிடம் 150 கிராம் தங்கம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் திருச்சியில் அந்த தங்க நகையை பெற்றுக்கொள்வதற்காக இப்ராஹிம் என்பவர் வருவார் என்றும் செல்வகுமாரின் புகைப்படத்தை நகையை கொடுத்தவர் இப்ராஹிமுக்கு அனுப்பி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் வந்தவர்களை அதிகாரிகள் சோதனை செய்வதை பார்த்த செல்வகுமார் பயத்தில் கழிவறையில் தங்க நகையை வீசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர் விசாரணையில் செல்வக்குமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை பதுக்கி உள்ளாரா அல்லது இவர் வீசி சென்றாரா என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.