Skip to main content

“உங்கள ஃபோட்டோ எடுக்கணும்” - அரசு அதிகாரி போல் வந்த நபர்; மோசடி செய்யப்பட்ட பெண்கள்

 

A person who comes as a government official to “take your photo”; Cheated women

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள வடக்கு ராஜபுரத்தில் வசிப்பவர் ஜெயச்செல்வி(55). கடந்த 24 ஆம் தேதி இவரது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் தான் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, அரசிடமிருந்து உதவித் தொகை கிடைக்க உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகைப்படம் எடுக்கும் போது, கழுத்தில் நகை போட்டுக் கொண்டு புகைப்படத்தில் இருந்தால் உதவித் தொகை கிடைக்காது எனவே கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். 

 

அதை நம்பிய ஜெயச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழற்றி பக்கத்தில் வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். செல்போன் மூலம் அவரை போட்டோ எடுத்த அந்த மர்ம நபர் அவரது கவனத்தை திசை திருப்பி நகையைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின் நகையைத் தேடிய பொழுது அது கிடைக்காமல் போகவே அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயச்செல்வி இது குறித்து ஓலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்த நிலையில் அதே சேத்தியாதோப்பு பகுதி காட்டுக்கரை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மனைவி அகிலாண்டேஸ்வரி என்பவரது  வீட்டிற்கு கடந்த 12 ஆம் தேதி சென்ற அதே மர்ம நபர் அவரிடமும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உதவித் தொகை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். அவரது காதில் அணிந்து இருந்த 4 கிராம் தோட்டை கழட்டி வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியுள்ளார். இதன் பின் தோட்டை கழற்றி வைத்த அகிலாண்டேஸ்வரி கவனத்தை திசை திருப்பி அந்த தோடுகளை அபகரித்துச் சென்றுள்ளார். 

 

இந்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சிதம்பரம் அருகில் உள்ள மதுராந்தக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசை குமார் என்பவரது மகன் ரங்கநாதன் என்பவர் இச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுபோன்று வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முதியோர் உதவித் தொகை பெற்றுத் தர வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி அவர்களை நம்ப வைத்து கழுத்தில் காதில் உள்ள நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. நகைகளை அபகரித்த ரங்கநாதனை தனிப்படை எஸ்ஐ ராஜா ஏட்டுகள் விஜயகுமார், சங்கர், ரஜினி, புகழ் மற்றும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது முதியோர்களிடம் நகை பறித்ததை ரங்கநாதன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீடுகளில் தனியாக இருக்கும் இருக்கும் வயது முதிர்ந்த முதியோர்கள் இதுபோன்ற மர்ம மனிதர்களிடம் ஏமாறக்கூடாது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !