A person shouted front of Panthanallur station

“என் வீட்டு காச லஞ்சமா வாங்கிக்கிட்டு, என்னோட பணத்துல கறி, மீன திண்ணுட்டு என்னோட வண்டியை பிடிச்சி, கேஸ்போடுறீங்களா, உங்களை சும்மா விடமாட்டேன் உங்க வேட்டி அவிழ்த்து விடுகிறேன், எனக்கு கரோனா இருக்கு முடிந்தால் என்னை தொட்டு பாருங்க” காவல்நிலையத்தின் முன்பு மணல் கடத்தல் நபர் ஒருவர் பகிரங்கமாக போலீஸாரை மிரட்டி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவருவது போலீசாரிடையே கலகலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்காவை சேர்ந்த பந்தநல்லுார் காவர்சராகத்திற்கு உட்பட்ட கிராமம் குலசேகரநல்லுார், கொள்ளிடம் கரையோரம் இந்த கிராமம் இருப்பதால் தினசரி நூற்றுக்கணக்கான டிராக்டர், லாரி, மாட்டுவண்டிகளில் மணல் கடத்தல் நடப்பது வாடிக்கை. அப்படி மணல் கடத்தல் தொழிலை காவல்துறையினரின் உதவியோடு செய்துவருபவர்களில் ஒருவர்தான் குலசேகரநல்லூர் வடக்குத்தெரு சேர்ந்த சுப்புராயன் மகன் இளையராஜா.

Advertisment

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் பத்துக்கும் அதிகமான டிராக்டர்களில் மணல் கடத்தியுள்ளனர். மணல் கடத்துவதற்கான சட்டத்திற்கு புறம்பான அனுமதியை பந்தநல்லூர் காவல்துறையில் உள்ள ஒருதரப்பு காவலர்களிடம் வாங்கிக்கொண்டு மணலை கடத்தியிருக்கின்றனர். இந்த சூழலில் மற்றொரு தரப்பு காவலர்கள் மணல்கடத்தலை தடுக்கபோகிறோம் என்று இளையராஜாவுக்கு சொந்தமான மூன்று டிராக்டர்களை மட்டும் மணல் கடத்தியாக பறிமுதல் செய்தனர்.

இந்த சூழலில் பந்தநல்லூர் மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளையராஜா, தனது டிராக்டரை மட்டும் பறிமுதல் செய்ததை அறிந்து பந்தநல்லுார் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். போலீஸ் நிலையத்தில், ஒரு பெண் போலீசாரை தவிர இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மற்ற போலீசார் வெளியே சென்றிருந்தனர். கோபத்தோடு வந்த இளையராஜா, தனது செல்போனில் செல்பி கேமரா மூலம் வீடியோ எடுத்தபடியே போலீசாரை சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

அதில், "மணல் திருடுவதற்கு பணம் வாங்கிய போலீஸ் அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன். எல்லாருமே திருட்டு பயலுக. எனக்கு கரோனா உள்ளது. என்னை தொட முடியாது தொட்டால் செத்தான் அவன். எவ்வளவு திமிர் இருந்தால் என் வீட்டு காசை லட்சம் லட்சமாக தின்னுவிட்டு, என்னோட வாகனத்தை பறிமுதல் செய்வீங்க, அவ்வளவு திமிரா உங்களுக்கு. இன்ஸ்பெக்டர் எங்கே, யாருமே இல்லையா. காசு மட்டும் வாங்க தெரியுதுல்ல, இன்ஸ்பெக்டர வெளியே வரச்சொல்லுங்க, ஏன்னா நான் உள்ளே வரமுடியாது, நான் கரோனா பேஷன்ட், உங்களால் நான் செத்துவிடுவேன் போல இருக்கு. உங்களால எனக்கு அதிக கரோனா வந்திடும் போல இருக்கு. இது திருட்டுப்பயலுக ஸ்டேஷனா இருக்கு, என்னோட வண்டியை புடிச்சு கேஸ் போடறாங்க. இந்த ஸ்டேஷனில் பணம் வாங்காமல் இருக்கிறாங்களா. ஒரு இரவு, 30 மணல் கடத்தல் வண்டிக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம் கொடுக்கிறோம். நாங்கள் கொடுக்கும் பணத்தை நீங்கள் தான் பிரிச்சிக்கிறீங்க. என் வீட்டு காசை திண்கிறீங்கல்ல" என திட்டியபடியே தன்னையும் காவல்நிலையத்தையும் வீடியோ எடுத்து கொண்டு போலீஸ் ஸ்டேசனை விட்டு வெளி வந்திருக்கிறார் இளையராஜா.

இதுகுறித்து பந்தநல்லுார் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்துள்ளார். மணல் கடத்தலுக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதை, அந்த காவல் நிலையம் முன்பு, மணல் கடத்தும் நபரே தைரியமாக, வீடியோவாக எடுத்து, வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.