
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த வளையபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் கண்ணன் (எ) பழனிச்சாமி (45). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். பந்தல் போடும் வேலை செய்துவரும் இவர், தன்னுடன் பணிபுரிபவரின் 10ஆம் வகுப்பு படிக்கும் மகள் மீது ஆசைகொண்டிருக்கிறார்.
அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அதேபோல், அச்சிறுமியின் வீட்டிற்கும் அடிக்கடி சென்றுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து, பள்ளி மாணவி காணாமல் போனதாக பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பழனிச்சாமி பள்ளி மாணவியுடன் சோமனூர் அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்குச் சென்ற போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதைப் பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.