சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதைத் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் ‘Grand Western Trunk Road’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்த நெடுஞ்சாலைத்துறை, ‘சென்னை கிராண்ட் வெர்ஸ்டன் டிரங்க் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அது ஈ.வெ.ரா சாலை என அழைக்கப்படுவதுண்டு. தமிழக அரசின் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் சாலை என்றுதான் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், "நெடுஞ்சாலைத் துறையின் பதிவில் 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க்' சாலை என்றுதான் இருக்கிறது. மாநகராட்சியின் பதிவில்தான் ஈ.வெ.ரா. பெரியார் சாலை என்று மாற்றியிருக்கிறார்கள். இதற்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலைத்துறை ஆவணங்களில் ஏன் மாற்றவில்லை" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை திமுகவின் எம்.பி,க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்து மனு அளித்தனர். வெளியில் வந்த ஆர்.எஸ்.பாரதியிடம், "பெரியார் சாலைக்கு பெயர் வைத்த விவகாரத்தில், அரசாணையில் இதுவரை பெயர் மாற்றப்படவில்லை எனக் கூறியுள்ளாரே பாஜக தலைவர் முருகன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "1979ல் பூந்தமல்லி சாலைக்கு பெரியார் சாலை என எம்.ஜி.ஆர் பெயர் வைத்தார். ஆனால், திடீரென சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட பெயர்களை மீண்டும் வைக்கக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல் படி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளோம்.
பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நெடுஞ்சாலைத்துறை ஆவணத்தில் பெயர் மாற்றாமல் இருப்பதாகச் சொல்வது பொருத்தமற்றது. அவர் அந்தக்காலத்தில் பிறந்திருக்கவே மாட்டார். 52 ஆண்டுகாலம் அண்ணா சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது, 46 ஆண்டுகாலமாக காமராஜர் சாலையும், பெரியார் ஈவெரா சாலை 43 ஆண்டு காலமாகவும் அவ்வாறாக அழைக்கப்பட்டு வருகிறது.
இதெல்லாம் எல்.முருகனுக்குத் தெரியாதா? வேண்டுமானால் கண்ணாடி ஒன்று வாங்கித் தருகிறேன். போய் பெயர்ப் பலகைகளைப் பார்த்துவிட்டு வரச்சொல்லுங்கள். ஆவணத்தில் இருக்கிறது என்பதை தலைமைச் செயலரே ஒப்புக்கொண்டார் பிறகு இவர் என்ன சொல்வது” எனத் தெரிவித்தார்.