Skip to main content

“பெரியார் இந்து மக்கள் யாவருக்குமான எதிரி என அவதூறு பரப்புகின்றனர்”  - தொல். திருமாவளவன்! 

 

"Periyar distorts the facts and spreads slander as the enemy of all Hindu people" - Thirumavalavan

 

பெரியார் பிறந்த தினமான இன்று சமூக நீதி நாளாகத் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் அது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

 

அந்த அறிக்கையில் அவர், “தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்-17,  இனி ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ எனக் கொண்டாடப்படும். அத்துடன், இந்நாளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாவரும் 'சமூகநீதி நாள் உறுதிமொழி' ஏற்பார்கள். 

 

இதனைத் தமிழக முதல்வர், செப்டம்பர்- 06 அன்று சட்டப்பேரவையில் பெருமிதம் பொங்க அறிவித்தார். அவர் பெரியாரின் பாசறையில், அண்ணாவின் அரவணைப்பில், கலைஞரின் வழிகாட்டுதலில் சமூகநீதி கொள்கை ஈர்ப்பால் வளர்ந்த 'திராவிட வார்ப்பு' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அத்துடன், இந்த அரசு  'பெரியார் அரசு அல்லது சமூகநீதி அரசு'  என்பதை ஊருக்கு- உலகுக்கு உரத்துச் சொல்லும் புரட்சிகரமான அறிவிப்பாகும். இது சனாதன- பழமைவாத - சமூகநீதிக்கு எதிரான பிற்போக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிகரமான நிலைப்பாடாகும். முதல்வரின் இந்தக் கொள்கைத் துணிவை விசிக சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். 

 

கடந்த ஆண்டுகளில்  பெரியாரின் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகக் கொண்டாடி வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்கிற முறையில், அதிகாரப் பூர்வமாக எமது கோரிக்கை நிறைவேறியிருக்கிறது என்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியால் இறும்பூது எய்துகிறோம்.

 

பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமூகநீதிக்காகவே என்பது யாவருமறிந்த ஒன்றாகும். அவரின் எழுத்தும், பேச்சும், இயங்கிய மூச்சும்; அவர் செலவிட்ட ஒவ்வொரு நொடியும், எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், விளிம்புநிலை மக்களுக்கான, சமூகநீதிக்காகவே என்பது ஊரறிந்த - உலகறிந்த ஒன்றாகும்.  பெரியார் என்றால் சமூகநீதி; சமூகநீதி என்றால் பெரியார் எனக் காலத்தால் அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு அவர் சமூகநீதியின் வடிவமாகவே விளங்கியவர்; இயங்கியவர். அத்தகைய பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது ஒரு தனிநபரைப் போற்றிப் புகழ்ந்து கூத்தாடுவது என்றாகாது; மாறாக, சமூகநீதி எனும் உயரிய கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துக் களமாடுவதே ஆகும். அதாவது, சமூகநீதியைக் கூர்மைப்படுத்திச் செழுமைப்படுத்துவதற்கான, மென்மேலும் அதனை வலிமைப்படுத்துவதற்கான அளப்பரிய வாய்ப்பை வழங்கும் கொண்டாட்டமாகவே இது அமையும்.

 

பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு  என்றெல்லாம் அடையாளப்படுத்துவோருக்கிடையில், அவரை சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் இந்தப் புரட்சிகர நடவடிக்கைப் போற்றுதலுக்குரியதாகும். சமூகநீதி என்பது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையாய்ப் பெறுகிற இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இது சமத்துவத்தை வென்றெடுக்கும் சனநாயக வழியிலான அறப்போருக்குரிய கருத்தியல் பேராயுதமாகும். அதாவது, சமத்துவ இலக்கை எட்டுவதற்கான நெறிமுறை ஜனநாயகமென்றால், அத்தகைய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையே சமூகநீதியாகும்.

 

இத்தகைய சமத்துவத்தை இலக்காகக் கொண்டு சமரசமின்றி இறுதிவரை சமர் புரிந்த பெரியார், சமத்துவத்தின் நேர்ப் பகையான சனாதனத்தை வெகுமக்களிடையே அடையாளப்படுத்துவதையும் அம்பலப்படுத்துவதையுமே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு ஓய்வின்றி சலிப்பின்றி களமாடினார். சனாதனம் தான் அவரது ஒரே பகை! சனாதனத்தை வேரறுப்பதுதான் அவரது ஒரே குறிக்கோள்! சனாதனத்தை வேரறுத்து வீழ்த்தாமல் சமத்துவத்தை வென்றெடுக்க இயலாது என்பதை உணர்ந்ததால் தான், அவர் சனாதன சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவதிலேயே மிகவும் தீவிரமாக இருந்தார். சனாதன எதிர்ப்பிலிருந்துதான் பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் எதிர்ப்பும் உத்திகளாக அமைகின்றன.

 

பிறப்பின் அடிப்படையில் மனிதருக்கிடையில் உயர்வு - தாழ்வைக் கற்பித்து அதனை நிலைப்படுத்திய கோட்பாடு தான் சனாதனம். இந்தப் பாகுபாட்டுக்கு அவரவரின் முன்வினை அல்லது முற்பிறப்பின் வினை என்னும் கர்மாவே காரணமென்றும் அவற்றை இறைவனே தீர்மானிக்கிறான் என்றும் கொள்கைகளை வரையறுத்து அவற்றைப் பரப்பி,  அதனால் இன்றுவரை பயன் துய்ப்பவர்கள் பார்ப்பனர்களே  என்று அவர்களை அடையாளப்படுத்தியதும் அம்பலப்படுத்தியதும் பெரியார்.

 

ஆகவேதான் அவர்மீது எதிர்வினையாகத் தொடர்ந்து வெறுப்பை உமிழ்கின்றனர். உண்மைகளைத் திரித்து அவர் இந்து மக்கள் யாவருக்குமான எதிரி என அவதூறு பரப்புகின்றனர். அதாவது, பார்ப்பன சமூகத்தின் நீண்டகால உழைப்புச் சுரண்டலைத் தான் அம்பேத்கரும் பெரியாரும் தமது இறுதி மூச்சுவரை எதிர்த்தனர். ஆனாலும் பெரியாரைக் குறிவைத்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவதூறுகளை அள்ளி இறைத்து வருகின்றனர். ஆரியர் அல்லது பார்ப்பன ஆதிக்க சக்திகளின் இத்தகைய பெரியார் எதிர்ப்பே, காலப்போக்கில் திமுக எதிர்ப்பாகவும் திராவிட அரசியல் எதிர்ப்பாகவும் விரிவடைந்துள்ளது. திமுகவை அதன் தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விமர்சிப்பது என்பது வேறு; அதன் சமூகநீதி கோட்பாட்டு அரசியலிலிருந்து விமர்சிப்பது என்பது வேறு.

 

அடிப்படையில், அவர்கள் சமூகநீதி எதிர்ப்பிலிருந்தே பெரியாரையும், பெரியார் எதிர்ப்பிலிருந்தே திமுக மற்றும் திராவிட அரசியலையும் எதிர்க்கிறார்கள். இந்நிலையில்தான் தமிழக அரசு பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாள் என அறிவித்துள்ளது. இது சனாதனத்துக்கு எதிராகச் சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கோட்பாட்டு யுத்தமே ஆகும்.

 

எனவே, இன்று எனது அறைகூவலையேற்று சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இந்த கோட்பாட்டு அறப்போரில்  களமிறங்கி உறுதிமொழியேற்ற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் யாவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.