31 ஆண்டு காலம் சிறையிலிருந்து விடுதலையான பேரறிவாளன் தனது விடுதலைக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் முதல் அமைப்புகளின் நிர்வாகிகள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். விடுதலையான முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருட்டினன் என எல்லோரையும் அவரவர் இல்லத்திற்கே சென்று நன்றி கூறும் பேரறிவாளன் 22ந் தேதி மாலை தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனை அவரது ஈரோடு இல்லத்தில், தனது அன்னை அற்புதம்மாளுடன் நேரில் வந்து சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசனும் உடனிருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விடுதலை புலிகளுக்கு உதவியதாக பொய் வழக்கு பதியப்பட்டு சுப்புலட்சுமியும் அவரது கணவர் ஜெகதீசனும் 'தடா' கைதிகளாக வருடக்கணக்கில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் அவர்கள் பல்வேறு கொடுமைகளை சந்தித்தனர்.