பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கும் வேலைகளை தொடங்கி விட்டதாக அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறினார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் மே 18ம் தேதி விடுதலை செய்தது. அரசியலமைப்புச் சட்டம் 142வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதையடுத்து அவர், தனது விடுதலைக்காக சட்டப் போராட்டம் நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ மற்றும் ஆதரவாக இருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் தங்கியுள்ள நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினையும், பேரறிவாளன் வெள்ளிக்கிழமை (மே 20) சந்தித்து நன்றி கூறினார். திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி தெரிவித்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் அவர்களுக்கு நன்றி கூறினார்.
இதையடுத்து அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியது; "பேரறிவாளனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினையும், பட இயக்குநர் மாரி செல்வராஜையும் சந்தித்து நன்றி கூறினோம். சாமானியர்களின் குரல் எடுபடாது என்பது போல, என் மகன் குற்றவாளி இல்லை என்று சட்டரீதியாக போராடியும் எடுபடவில்லை. 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகன் 31 ஆண்டுகள் கழித்து சுதந்திர மனிதனாக வெளியே வந்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சிறையில் வாடும் பலருக்கு பயனளிக்கும். இனி, பேரறிவாளனுக்கு குடும்பம் அமைத்து தர வேண்டும் என்ற ஏக்கம் உள்ளது. அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக பெண் தேட தொடங்கி விட்டோம்.” இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.
பேரறிவாளன் கூறுகையில், ''இது எனக்கு புது உலகமாக இருக்கிறது. சிறையில் எனக்கு எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லை. அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். சிறையில், நான் மற்ற சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். சாமானியன் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் எத்தனை துன்பங்களையும், வலிகளையும் சந்திக்க வேண்டும் என்பதை இந்த தண்டனை மூலம் உணர்ந்து கொண்டேன். ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது. அந்த முடிவு, ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆணித்தரமாக கூறியுள்ளது. இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்'' என்றார்.