பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சக ஆசிரியரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு வாக்குமூலங்கள் பகீரை கிளப்பியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வி.களத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீபா என்பவர் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன். தீபா மாற்றுத்திறனாளி என்பதால் அவர் தினமும் பள்ளி செல்வதற்கு கார் ஒன்றை கணவர் பாலமுருகன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கணித ஆசிரியர் தீபாவிற்கும் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசனுக்கு இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு காரில் சென்ற தீபா வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தீபாவின் கணவர் பாலமுருகன் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தீபா சென்ற கார் கோவை பகுதியில் உள்ள வனப் பகுதியில் மீட்கப்பட்டது.
தொடர்ச்சியான விசாரணையில், தீபாவை ஆசிரியரான வெங்கடேசன் எரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வெங்கடேசனை போலீசார் ஒரு வழியாகச் சென்னையில் வைத்து கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வெங்கடேசன், இருவருக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், அந்த நேரத்தில் அடிக்கடி லட்சக் கணக்கில் ஆசிரியை தீபாவிடம் பணம் வாங்கியதாகவும், ஒரு கட்டத்தில் அவர் கொடுத்த பணத்தை திரும்பிக் கேட்டதால் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பெரம்பலூரில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து தீபாவை கொலை செய்துவிட்டு அவரது உடலைக் காரின் டிக்கியில் வைத்து புதுக்கோட்டைக்கு சென்று அவரது உடலை மட்டும் தீவைத்து எரித்துள்ளார். மேலும் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க காரை மட்டும் கோவை எடுத்துச் சென்று அங்குள்ள ஒரு பகுதியில் விட்டுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரியையிடம் இருந்து வெங்கடேசன் வாங்கிய 26 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெங்கடேசனை திருச்சி சிறையில் அடைத்தனர்.