Skip to main content

போட்டித் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்கள்; பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்

 

perambalur ariyalur collector taking coaching class for govt school students

 

பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

 

மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய சிறப்பு பயிற்சி வகுப்பான விலங்கியல் பாடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இ.ஆ.ப. நடத்தினார். மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்ததும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 05 ஆம் தேதி தொடங்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்ப நிதியிலிருந்து 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி வகுப்புகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எவ்வித அச்சமும் தயக்கமும் பதற்றமும் இல்லாமல் எழுதும் வகையில் ஒவ்வொரு பாடத்திலும் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

perambalur ariyalur collector taking coaching class for govt school students

 

இறுதியாக 02.05.2023, 03.05.2023 மற்றும் 04.05.2023 ஆகிய தேதிகளில் காலை மாதிரி தேர்வுகளும், மாலை பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. வகுப்பில் காலை நடைபெற்ற தேர்வுக்கான பதில் மற்றும் அது தொடர்பாக மேலும் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்று விலங்கியல் தொடர்பாக நடைபெற்ற மாலை நேரப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்தினார். மாணவர்களுக்கு விலங்கியல் தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாகப் புரியும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாடம் நடத்தியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தார்கள்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !