தமிழகத்தில் கரோனா வைரஸ் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த வரும் ஜூன் 28 -ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பல மாவட்டங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை ஏற்படுத்தும் வகையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளை முழுமையாக முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் பலர் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர். 28-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 22 ந் தேதி மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 217 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றியதாக 246 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
211 இருசக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூபாய் 1 லட்சத்து 99 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சோதனை சாவடிகளில் இ-பதிவு இன்றி வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதே போல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் மோட்டார் சைக்கிளை போலீஸார் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வர வலியுறுத்தினர்.