கடலூர், அரியலூர் மாவட்டங்களின் இடையே ஓடுகிறது வெள்ளாறு. பெண்ணாடம் அருகே உள்ள செம்பேரி- தெத்தேரிக்கும் இடையே ஆற்றில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இரு மாவட்டங்களுக்கு இடையே உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், சிமெண்ட் ஆலைகளுக்கு வேலை செய்வதற்கும் சென்று வரும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த வழியைக் கடந்து செல்கின்றனர். அப்படி போக்குவரத்திற்கு முக்கியத்துவம் பெற்ற இந்த மண் சாலை ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் திடீரென மழைநீர் பெருக்கெடுத்து வரும் போதும் சாலை உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
மழைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் அந்த மண் சாலையை அப்பகுதி பொதுமக்கள் செப்பனிட்டு போக்குவரத்திற்கு வழி செய்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த இடி மின்னலுடன் கொட்டிய கோடை மழையின் காரணமாக ஆனைவாரி ஓடையில் பெருக்கெடுத்து ஓடிவந்த மழை தண்ணீர் தெத்தேரி - சம்பேரி இடையே போடப்பட்டிருந்த மண் சாலையை உடைத்து எறிந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இனி மழை காலம் நெருங்கி வருவதால் ஆற்றைக் கடந்து செல்ல மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆற்றில் குறுக்கே கோட்டைக்காடு - சௌந்தர சோழபுரம் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் இன்னும் நீண்டு கொண்டே செல்வதால் மக்கள் போக்குவரத்திற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மேம்பால பணியை விரைந்து முடித்து வரும் மழைக்காலங்களில் மக்கள் போக்குவரத்திற்கு எந்த வித தடையும் இல்லாமல் சென்று வருவதற்க்கு பாலத்தின் பணி முடிந்து பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். எனவே தமிழக அரசும், அதிகாரிகளும் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மக்களும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.