நாகை காடம்பாடி சவேரியார் கோவில் நியாயவிலைக் கடையில் வண்டு மொய்த்த தரமற்ற அரிசியை பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி கொடுத்ததால், பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி எதிர்ப்பு காட்டியுள்ளனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வார்டு காடம்பாடி சவேரியார் கோவில் தெரு பகுதியில் சுமார் 1000 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 5ம் எண் கொண்ட அரசு நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குறைபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த நியாவிலைக் கடையில் போடப்பட்ட அரிசியில், பூச்சிகள் இருந்துள்ளன. மேலும், அரிசியில் துர்நாற்றமும் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ரேஷன் பணியாளரிடம் கேட்கும்போது அவர், இஷ்டம்னா வாங்கிபோங்க இல்லன்னா இடத்த காலிபன்னுன்னு தரக்குறைவா பேசியதாக சொல்லப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த பயனாளர்கள் தாங்கள் வாங்கிய ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், தங்கள் பகுதிக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தரமற்ற அரிசி பெற்றால் அந்த அரிசியை உடனடியாக ரேஷன் கடையில் இருந்து கிடங்குகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதே போல கிடங்குகளில் உள்ள பொருட்கள் தரம் குறைந்தால் ரேஷன் கடைக்கு அனுப்பக்கூடாது என உணவுத்துறை ஊழியர்களுக்கு உத்தரவு போடபட்டிருந்தும் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை” என்கிறார் ஓய்வு பெற்ற உணவுத்துறை அதிகாரி ஒருவர்.