திருவாரூர் அருகே இடுகாட்டில் 150 ஆண்டுகால பழமையான மரத்தை வெட்ட சென்ற பொதுபணித்துறையினரை தடுத்து நிறுத்தி மரத்தை சுற்றி நின்று இந்த மரம் தங்களின் தெய்வங்களில் ஒன்று எனக்கூறியுள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.
திருவாரூர் அருகே அகரதிருநல்லூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த மரம் ஒன்று உள்ளது. அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் சடலங்களை அங்கு எரித்துவிட்டு அந்த மரத்திற்கு மாலை அணிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தாமல் பொதுப்பணித்துறை சார்பில் அந்த மரத்தை வெட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, டெண்டர் எடுத்தவர்கள் மரத்தை வெட்ட வந்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட பொதுமக்கள் அங்கு கூடிநின்று மரத்தை வெட்டவிடாமல் அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அதோடு மரத்தை சுற்றி நின்றவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கூறுகையில், "இந்த மரமானது தங்கள் இடகாட்டுக்கு சொந்தமானது, இந்த மரத்தினை சுற்றிலும் எங்களின் உறவினர்களின் சடலங்கள் உள்ளது. அவர்களின் ஆத்மா இங்கு சுற்றியே இருக்கிறது மேலும், இந்த மரம் எங்களுக்கு தெய்வம், அதனை வெட்டும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் கேட்டுக்கொண்டனர்.