Skip to main content

மறைந்த மக்கள் மருத்துவருக்கு சொந்த ஊரில் நடந்த மவுன ஊர்வலம்...

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

People pay silent tribute to Pudukottai doctor Bhaskar

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பிறந்த மருத்துவர் பாஸ்கரன் தனது மருத்துவப் பணியை மக்களுக்கான சேவையாக மட்டுமே செய்து வந்தார். அரசு மருத்துவமனையிலும் தனது தனியார் கிளினிக் வரும் அத்தனை பேரிடமும் கனிவான பேச்சாலேயே நோயை குணமாக்கும் சிறப்பைப் பெற்றிருந்தார். இதனாலேயே நோயாளிகள் அவரை தேடிச் சென்றனர். தன்னை தேடி வருவோரை நோயாளியாக பார்க்காமல் உறவாக பார்த்தார்.

 

மறமடக்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி என பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி. எந்த ஊர் போனாலும் தனது சொந்த ஊரை மறக்கவில்லை. அதனாலேயே கீரமங்கலம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரை தேடிச் சென்றனர். சிகிச்சைக்கு வந்தால் சிகிச்சை மட்டும் கொடுக்காமல், ஊர் நடப்புகளையும் கேட்டு விசாரித்து விட்டு, மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்துவிட்டு, “பஸ்க்கு பணம் இருக்கா.. இல்லைன்னா இந்தாங்க.. கொண்டுட்டு போங்க” என்று தன் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து கொடுத்து வழியனுப்பி வைத்த ஆயிரக்கணக்கான நிகழ்வுகளும் உண்டு..

 

“நம்ம ஊருக்காரங்க காலம்பூரா தோட்டத்திலேயே வேலை செஞ்சுட்டு, உடம்புக்கு முடியலன்னதும் நம்மள நம்பி வரும் போது அவங்ககிட்ட காசு பணத்தை பறிக்கலாமா? பாவமில்லயா.. அவங்க உயிரை காப்பாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைச்சிருக்கு. அதை சரியா செய்யணும்” என்று சொல்பவர், அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கூட தனியார் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து, அதற்கான கட்டணத்தை வாங்காமல் தன் சொந்த காசில் சாப்பாடும் வாங்கி கொடுத்துவிட்டு செல்வார்.

 

இப்படி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் நூறு கிராமங்களுக்கு மேல் உள்ள மக்களின் நன்மதிப்பை பெற்ற மனிதநேய மருத்துவர் பாஸ்கரனை வாழும் கடவுளாகவே மக்கள் பார்த்தனர். பாக்கெட்டில் பணமில்லை என்றாலும் பாஸ்கர் டாக்டரிடம் நம்பி போகலாம் என்ற எண்ணம் நூறு கிராம மக்களிடமும் இருந்தது.

 

இப்படியான மருத்துவருக்கு தான் உடல்நலமின்றி, பின்பு சிகிச்சை பலனின்றி 29ந் தேதி இயற்கை எய்தினார். இந்த தகவல் காட்டுத் தீயாக பரவி, அன்று இரவில் இருந்து அவரது உடலைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக மாலையோடு வந்து கதறி அழுது அஞ்சலி செலுத்திவிட்டு, இனி யாரை நம்பி மருத்துவத்திற்கு வருவோம் என்று சொல்லும் போது, அனைவரின் கண்களும் கலங்கின. ஒருவர் இறந்தால் உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். ஆனால், மருத்துவர் பாஸ்கரன் இறப்பில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தான் தெரிந்தது இவர் தான் மக்களை சம்பாதித்த மக்கள் மருத்துவர் என்று. 

 

பட்டுக்கோட்டையில் இறுதி அஞ்சலி ஊர்வலம் நடந்தாலும் கூட அவரது சொந்த ஊரான கீரமங்கலத்தில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்த வேண்டும் என்பது சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதனால் கீரமங்கலம் கடைவீதியில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து கருப்பு பட்டை அணிந்து ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலத்தில் பங்கேற்றனர். கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக 3 கி.மீ. சுற்றி மீண்டும் பேருந்துநிலையம் வந்தடைந்த பிறகு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதுவரை யாருக்கும் இல்லாத அளவிற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அவரால் பயனடைந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மருத்துவர் பாஸ்கரன் இறப்பு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

 


 

சார்ந்த செய்திகள்