வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு அருகே ஏரிகுத்தி கிராமம் உள்ளது. இப்பகுதியில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான கூட்டுறவு பால் சங்கம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்தது. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் 1000 கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் இக்கிராமத்தில் மட்டும் தினந்தோறும் சுமார் 2000 லிட்டர் பால் கொள்முதல் நடைபெறுகிறது. அவ்வாறு பெறப்படும் பாலை அருகில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்தில் செலுத்தி வந்தனர்.
அதன் பின்னர் மெல்ல மெல்ல சங்க பணிகள் தொய்வடைந்தன. தற்பொழுது 20 ஆண்டுகளாக கூட்டுறவு பால் சங்கம் செயல்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரிகுத்தி கிராமத்தில் கூட்டுறவு பால் சங்கம் செயல்பட்டு வந்தது. தற்பொழுது பால் சங்கம் செயல்படுவதில்லை. இதனால் கிராமத்தில் உள்ள பால் வியாபாரிகள் பொதுமக்களிடம் பெறப்படும் பாலை சில்லறை விற்பனை செய்துவிட்டு மீதம் உள்ள பாலை தனியார் பால் நிறுவனங்களுக்கு தினந்தோறும் ஏற்றுமதி செய்கின்றனர்.
பால் வியாபாரிகள் எங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை தான் கொடுக்கின்றனர். இந்தத் தொகையானது கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் சரியாக உள்ளது. இதே போல் அருகில் உள்ள கொத்தப்பள்ளி ஓங்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துலக்கண்குட்டை கிராமத்திற்கு சென்று தனியாருக்கு பாலை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் கால்நடை வைத்திருப்போர் வருமானம் குறைவு என்பதால் கால்நடைகளை விற்று வருகின்றனர். மேலும் பால் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது.
புது வாழ்வு திட்ட மூலம் பால் பெற்று தனியாருக்கு விற்று வந்தனர். தற்பொழுது புது வாழ்வு திட்டமும் 5 வருடமாக செயல்படவில்லை. மேலும் பால் வியாபாரிகள் பாலை பெற்றுக் கொண்டு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் எங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை கொடுக்கின்றனர். மீண்டும் ஏற்கனவே இருந்தது போல் அரசின் கூட்டுறவு பால் சங்கம் செயல்பட்டால் கிராம மக்கள் உட்பட சுற்றுப்புற பகுதி மக்கள் பாலை அரசுக்கு செலுத்தி அரசிடம் வரும் மானியத்தின் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்கள்.