சிவகாசியில் செயல்பட்டு வரும் 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகின்றன. இதனைத் தவிர்க்கும் விதமாகவும், தொடர் விபத்துகளைத் தடுக்கவும் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அவ்வப்போது அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி சிவகாசியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளுக்கு இது தொடர்பான பயிற்சியில் கலந்துகொள்ளப் பட்டாசு ஆலையில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதனைப் பட்டாசு ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகாசியில் பயிற்சிக்குத் தொழிலாளர்களை அனுப்பாத 98 பட்டாசு ஆலைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது குறித்து அளிக்கப்பட்ட பயிற்சிக்கு போர்மேன்களை அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்குத் தொழிலக பாதுகாப்புத்துறை அபராதம் விதித்துள்ளது.