கடல் வாழ் உயிரினங்கள் உணவாக மட்டும் இல்லாது உயிர் காக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. அந்த வகையில் கடல் வாழ் உயிரினமான திருக்கை மீனில் இருந்து முக்கிய மருத்துவ மூலக்கூறுகளைப் பிரித்து எடுத்துச் சாதனை புரிந்துள்ளார் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் அறிவியல் புல பேராசிரியர் ஆறுமுகம் மற்றும் அவருடைய ஆராய்ச்சிக் குழுவினர்.
பொதுவாகத் திருக்கை (திருக்கார்) மீன்கள் விஷமுடைய நீண்ட முட்களைக் கொண்டுள்ளது. அம்மீன்களில் உள்ள முட்களை நீக்கி விட்டு உணவுக்காக அதனைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முட்களிலிருந்து மருந்து பொருட்கள் எடுத்து இரத்தம் உறைதலை தடுக்கவும், கேன்சர் செல்களை அழிக்கும் மருந்தாகவோ பயன்படுத்த முடியும். மேலும் இதன் மூலக்கூறுகளில் இருந்து ஆற்றல் மிக்க வலி நிவாரணி உருவாக்க முடியும்.
இது சம்பந்தமாக உலகளாவிய அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குறிப்பிட்ட ஆராய்ச்சிக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் எம்.ஆறுமுகம் தலைமையிலான குழுவினருக்கு ரூ. 2.75 கோடி நிதி வழங்கி உதவியதன் பெயரில் இச்சாதனையை புரிந்திருக்கின்றனர். இதனையடுத்து பேராசிரியர் எம்.ஆறுமுகம், ஆராய்ச்சி மாணவி எஸ்.உத்ரா உள்ளிட்ட ஆராய்ச்சிக் குழுவினர்களை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் பேராசிரியர் சிங்காரவேல், கடல் அறிவியல் புல முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ஆறுமுகம் கூறுகையில், "கடந்த 2022 ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயராய்வு மையம் கடல் வளம் மற்றும் உயிரினங்களில் மருந்துப் பொருட்கள் தயாரிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்போது திருக்கை மீனில் உள்ள முட்களை அதிக அளவில் நீக்கிப் போட்டுள்ளதை எடுத்துப் பதப்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இது போன்ற மருத்துவ குணங்கள் உள்ளது எனத் தெரியவந்தது. பின்னர் ஆராய்ச்சியின் முடிவுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி நாட்டில் காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் ஆராய்ச்சி முடிகளைப் பரிசீலனை செய்து காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் இது அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.