
ரயில் நிலையங்களில் தூய்மை வசதிகளை மேம்படுத்தும் கருத்துகளை பெற்று ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள ரயில் பயணிகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, இன்று திருச்சியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, திருச்சி ஜங்சன் ரயில் நிலைய நடைமேடை, கழிப்பறை, காத்திருப்பு அறை, உணவகங்களில் ஆய்வு செய்தனர். அதே போல ரயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா, நிறை குறைகள் என்ன என்பது குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தனர்.
இது குறித்து ஆய்வுக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் சிறப்பான நடவடிக்கைகளால் ரயில்வே நிர்வாகம் மேம்பட்டு வருகிறது. பயணிகளின் கருத்துக்களும் இதனையே பிரதிபலிக்கின்றன. சிவகங்கையிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படுமா என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வந்துள்ளன. இதன் கருத்துக்களை ரயில்வே நிர்வாகத்திடம் அனுப்பி வைப்போம். அதே போல திருச்சி முதல் தஞ்சை பயணிகள் ரயில் கட்டணம் ரூ. 10 லிருந்து ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை குறைக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து உரிய தீர்வு எட்டப்படும்” என்றனர்.