Skip to main content

“சம்பள உயர்வு, பணிநிரந்தரம் வேண்டும்..” - முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை 

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

 Part time teachers association request cm stalin Salary increase tenure required

 

தமிழகப் பள்ளிகளில் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களாக 12,327 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களை, தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181ல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

 

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது, "எங்களுக்கு முன்பு உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை அதே உடற்கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் "சர்வ சிக்சா அபியான்" என்ற மத்திய அரசு திட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தியது. அந்த திட்டமானது தற்போது "சமக்ர சிக்சா" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

 

இந்தத் திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் செய்கின்ற பணியும், நிரந்தரப்பணியில் உள்ள சிறப்பாசிரியர்கள் செய்யும் பணியும் ஒன்று தான். கல்வித் தகுதியும் ஒன்று தான். இப்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாங்கள் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். இதற்காக ஒரு ஆண்டுக்கு 140 கோடி செலவாகிறது. இதை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கினால் புதிதாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஆரம்ப ஊதியத்தில் இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த முடியும். கல்வி மேம்பாட்டிற்காக இதை ஒரு செலவாகக் கருதக்கூடாது.

 

12 ஆயிரம் குடும்பம் வாழ தமிழக முதல்வர் ரூ. 300 கோடி நிதியை கூடுதலாக ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அமைச்சரவையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதற்கான முடிவு எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ள பாதிப்பைப் பார்வையிட சிதம்பரம், திருவெண்காடு பூந்தோட்டம் வந்தபோது கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், முதல்வர் செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள் அனைவரிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனைப் பரிசீலித்து பணிநிரந்தரம் செய்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்.”  என்றார்.

 

மேலும், அவர் கூறுகையில், “சமக்ர சிக்சா (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாளர்களைப் போலவே பகுதிநேர ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறோம். இதில் பணியாளர்களுக்கு மட்டுமே 15 சதவீதம் சம்பளம் உயர்த்தி இந்த நவம்பர் மாதம் முதல் வழங்க எஸ்பிடி மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு வழங்க இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த ஊதிய உயர்வை உடனே பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் செப்டம்பர் 10ம் தேதி முதல்வர் அறிவித்த பணிமாறுதலை உடனே வழங்க வேண்டும்."  என்றும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.