நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்த ஆண்டே தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத் தேர்தலுக்குப் பிறகும் பிற மாநில தேர்தலுக்கு தாங்கள் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பித் திரும்பப் பெறுவது வழக்கம்.
இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்றவற்றை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாவட்ட வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் போன்றவற்றை மதிப்பிடும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைக்கு அதிகமாக 35% கூடுதல் இயந்திரங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இது குறித்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள சீரமைப்பை பற்றி முதனிலை சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்துக்கென சொந்த கிடங்குகள் இல்லாததால் வாடகை கட்டடங்களில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.