Skip to main content

சடலமாக மீட்கப்பட்ட நர்சிங் மாணவி; நீதிமன்றம் செல்லும் பெற்றோர்!

Published on 31/12/2024 | Edited on 31/12/2024
Parents go to court after nursing student incident

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி ராஜாகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் சௌமியா(21). புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி நர்சிங் படித்து வந்தார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் இவருக்கு திருமணம் பேசி நிச்சயம் செய்த நிலையில், சௌமியாவிற்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு சௌமியா வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் மறு நாள் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

சௌமியாவின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரையடுத்து வடகாடு போலீசார் சௌமியாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரிடம் கடைசியாக பேசியவர்களிடம் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் 27 ஆம் தேதி காலை சௌமியா வீடு அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் சௌமியா உடலை மீட்டனர். வடகாடு போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், சௌமியாவை சிலர் அழைத்துச் சென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டிருக்க வேண்டும். அவர்களை போலீசார் கைது செய்யும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று சௌமியாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று வரை சடலத்தை வாங்கவில்லை.

இந்த நிலையில், சௌமியாவின் செல்போபை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் அழிக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் எடுத்துள்ளனர். கடைசியாக பேசியவர்கள் பட்டியலை சேகரித்துத் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல் சௌமியாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள மாப்பிள்ளையும் வாட்ஸ் அப் காலில் பேசியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடமும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். மற்றொரு பக்கம் நேற்று ஆலங்குடி டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான போலீசார் சௌமியா சடலமாக கடந்த கிணற்றை மீண்டும் ஆய்வு செய்தனர். கிணற்றில் சுமார் 9 ஆழத்திற்குத் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து சௌமியா வீட்டிற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்ததுடன் மேலும் சிலரது செல்போன்களையும் ஆய்வுக்காக வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்த சூழலில் சௌமியா இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். சௌமியா உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெற்றோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்