வேலூர், சத்துவாச்சாரிக்கு அருகேயுள்ள அலமேலுமங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன்(21). இவரும், காட்பாடி அருகேயுள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துவந்தனர். இது தெரியவர இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், எதிர்ப்பைமீறி கடந்த 3-ஆம் தேதி இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார் மணிகண்டன். இரண்டு நாள்கள் தேடி அலைந்த பிறகே மகள் தங்கியுள்ள வீட்டை பெற்றோர் கண்டுபிடித்தனர். கடந்த 5-ஆம் தேதி, உறவினர்களுடன் அங்குவந்த இளம்பெண்ணின் பெற்றோர் சமாதானம் செய்து மகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, காதல் மனைவியைத் தேடி கடந்த 9-ஆம் தேதி அவரது வீட்டுக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அங்கு காதல் மனைவி இல்லை. வீட்டில் இருந்த பெண்ணின் பெற்றோர் ஆத்திரப்பட்டு மணிகண்டனை துரத்தியடித்திருக்கின்றனர். இந்த நிலையில், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் மறைத்துவைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் மணிகண்டன் அளித்துள்ள புகார் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், திடீரென வேலூரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரில் இருந்து கைப்பேசி அழைப்பு ஒன்று மணிகண்டனுக்கு வந்துள்ளது. அதில், “நான் பெங்களூரில் இருக்கிறேன். என்னை வந்து அழைத்துச் செல்” என அவரின் காதல் மனைவி கூறியுள்ளார். உடனடியாக பெங்களூர் விரைந்து சென்ற மணிகண்டன் பெண்ணை நேரில் சந்தித்து அழைத்து வந்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேற்று (14.06.2024) தன்னையும் தன் மனைவியும் காப்பாற்றுங்கள் எனத் தஞ்சம் அடைந்துள்ளனர்.