புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு, புதுப்பட்டி உள்பட 8 இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சுமார் 10 ஆயிரம் அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து சோதனை செய்தனர். ஆனால் வருமானத்தை விட செலவு அதிகமாகும் என்பதால் இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் நில உரிமையாளர்களுக்கு குத்தகை வழங்கி வந்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்ட நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் வெடித்த போராட்டம் தொடர்ந்து 196 நாட்கள் நடந்தது. அப்போது தமிழகத்தில் விளை நிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது, ஏற்கனவே எண்ணெய் எடுக்க அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளைப் பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்தது. அப்போதைய ஆட்சியாளர்களும் மாவட்ட நிர்வாகமும் கோரிக்கையை ஏற்பதாக உறுதியளித்த பிறகு பல கிராமங்களில் நடந்த போராட்டம் நிறுத்தப்பட்டது.
பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பாக மூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் முன்வந்து சில மாதங்களாக வல்லுநர்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். புதுப்பட்டியில் மூடப்படும் ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களிலிருந்து சேகரிக்கப்படும் மண், ஜல்லியை மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்க ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் கொடுத்திருந்தனர்.
இந்தநிலையில் வானக்கண்காடு கிராமத்தில் உள்ள தரைமட்ட எண்ணெய் ஆழ்குழாய் கிணற்றை மூட 2 வது முறையாக வல்லுநர் குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த குழுவில் ஓ.என்.ஜி.சி புவியியல் ஆய்வு பொறியாளர் அருண்குமார், கட்டுமானப் பொறியாளர் எழில்வாணன், கனரக வாகன தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி மதிவாணன், பாதுகாப்பு அதிகாரி லோகநாதன், நிலமெடுப்பு வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் அறிக்கையைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அனுமதிபெற்று வானக்கண்காடு எண்ணெய் ஆழ்குழாய் கிணறு மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.