Skip to main content

என் வண்டிய எதுக்கு பிடிக்கிறீங்க? மிரட்டும் ஊ.மன்ற தலைவர் - காணாமல் போகும் கமண்டல நாகநதி

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
panchayat president threatened officials who came to stop digging mud Kamandala river.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்திலுள்ள ஒழுங்கம்பூண்டி கிராமத்தின் வழியாக செல்லும் ஆரணி கமண்டல நாகநதியின் ஆற்றில் தினமும் சுமார் 70 வண்டிகள் மணல் கடத்திக்கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. ஒரு டிராக்டர் மணல் 13 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறதாம். ஆற்றிலிருந்து பகலிலேயே மணல் கடத்துகிறார்கள் எனப் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறைக்கு அடிக்கடி புகார் சென்றும் அவர்கள் மெத்தனமாக நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மே 31ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மணல் கடத்துவதாக புகார் கூறியுள்ளனர். உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு நேரடியாக விசாரணைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆற்றிலிருந்து மணல் நிரப்பிக்கொண்டு ஒரு டிராக்டர் அங்கிருந்து செல்ல முயன்றதை அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்தவர்களிடம் டிராக்டர் ஓட்டுநர் சேர்ந்துகொண்டு, “அலுவலர்களிடம் இது யார் வண்டி தெரியுமா? மடக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா...” எனச் சண்டையிட்டுள்ளனர். அந்த டிராக்டர் டிரைவர், நம்ம வண்டியை புடிச்சிட்டாங்க என யாருக்கோ செல்போனில் தகவல் சொன்னதும், மட்டதாரி ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார் சம்பவயிடத்துக்கு வந்துள்ளார்.

இது என்னோட வண்டிதான் எதுக்கு பிடிக்கறிங்க என எகிறியுள்ளார். அதன்பின் தான் சார்ந்த ஆளும்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். அவர் என்ன பதில் சொன்னார் எனத்தெரியவில்லை. உடனே டிராக்டரில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவரே டோரை திறந்து மணலை கீழே கொட்டிவிட்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறுகின்றனர். அதிகாரிகள் தடுத்தும் கேட்காமல் டிராக்டர் வண்டி அங்கிருந்து சென்றுள்ளது. சமூக ஆர்வலர்கள் சிலர் அங்கு நடந்ததை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆரணி காவல்நிலையத்துக்கு புகார் எதுவும் வரவில்லை என்கிறார்கள், ஆரணி கோட்டாச்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் போன்ற வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதி காக்கிறார்கள். ஆரணி கமண்டல நாகநதியில் விண்ணமங்களம், தச்சூர், வாழைப்பந்தல், சீசமங்களம் உட்பட சில இடங்களில் இப்படி இரவு – பகல் பாராமல் ஆற்று மணலைத் திருடி விற்பனை செய்கின்றனர். இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஆரணியில் ஆளும்கட்சி, எதிர்கட்சி, சாதிகட்சி எனப் பாகுபாடு இல்லாமல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை மாதாமாதம் கப்பம் கட்டிவிட்டு ஆற்று மணலைக் கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க முயலும் ஒருசில வருவாய்த்துறை அலுவலர்களையும் மிரட்டுவதால், அவர்களுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவு இல்லாததால் அவர்களும் சைலண்ட் மோடுக்கு போய் விடுகிறார்கள். இந்தக் கொள்ளையை இப்போதாவது தடுக்காவிட்டால் கொஞ்ச காலத்தில் கமண்டலநதி காணாமல் போய்விடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்