புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கீழாத்தூர் நாடியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழா காணக் கனடாவில் இருந்து பறந்து வந்துள்ளனர் ஒரு குடும்பத்தினர். கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். மேலும், ஆடி மாதத்தில் முளைப்பாரி மற்றும் மது எடுப்புத் திருவிழா மிகச் சிறப்பாக இருக்கும். அதே போலக் கடந்த வாரம் புதன்கிழமை சுற்றுவட்டார கிராம மக்களால் முளைப்பாரித் திருவிழா நடந்தது.
அதே போல இன்று புதன்கிழமை நடந்த மது எடுப்புத் திருவிழாவில் கீழாத்தூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மண், வெண்கலம், எவர்சில்வர் குடங்களில் நெல் நிரப்பி அதன் மேல் தென்னம் பாளைகளைப் பிரித்து வைத்து அதில் மல்லிகைப் பூக்களை சரம் சரமாகச் சுற்றி அலங்காரம் செய்து ஊர்வலமாகத் தூக்கி வந்தனர். மேலும் பலர் மல்லிகைப் பூ சரங்களால் அலங்காரம் செய்தாலும் அதில் பேட்டரியில் இயங்கும் எல்.ஈ.டி பல்புகளை அலங்கரிக்கப்பட்ட பாளைகளில் சுற்றி வண்ண வண்ண விளக்குகளை எரியவிட்டுத் தூக்கி வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொழில் நுட்பம் வளர வளர இது போன்ற நவீனங்களும் வந்துள்ளதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஆடி மாதம் நடக்கும் மது எடுப்பு திருவிழா பற்றி அறிந்த பிரான்சை நாட்டைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் பிராங்க் என்கிற பிரான்சிஸ் பிகோடி தனது மனைவி பவானி மற்றும் இரு குழந்தைகளுடன் மது எடுப்புத்திருவிழாவில் வந்து கலந்து கொண்டது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பிராங்க் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று படிப்பிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டவர். கீழாத்தூர் கிராமத்தில் அறிவொளி கருப்பையா வீட்டில் பல நாட்கள் தங்கி இருந்து ஆய்வுகள் செய்த போது கிராம மக்களின் நட்பையும் அன்பையும் பெற்றதோடு தமிழில் நன்றாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.
தமிழ் மீதும் தமிழர்களின் பழக்க வழக்கம் பண்பாடுகளையும் கற்றுக் கொண்டவர் தன் மனைவிக்குப் பவானி என்று பெயர் வைத்து அழைக்கிறார். மேலும் விடுமுறைக் காலங்களில் கீழாத்தூர் வந்து செல்லும் பிராங்க் குடும்பத்தினர் இந்த வருடம் மது எடுப்புத் திருவிழா காணவும் குடும்பத்தோடு வந்து பாளை எடுப்பைப் பார்த்து ரசித்தனர். தமிழர்களின் பழக்கவழக்கம் அருமை என்கிறார் பிராங்க்.