தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மேற்பார்வையில் இயங்கும் தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஐந்து நாட்கள் கல்வெட்டு பயிலரங்கம் தமிழ்த்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பயிலரங்கத்தின் கடைசி நாளில் திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் மற்றும் கூழமந்தல் ஆகிய ஊர்களுக்கு கல்வெட்டு பயிற்சியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 40 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் ஆகியோர் களப்பயணம் மேற்கொண்டனர்.
மாமண்டூர் குடைவரையில் களப்பயணம் மேற்கொண்டபோது 4-வது ஆக உள்ள குடைவரையை பார்வையிட்டு கீழே இறங்கும் போது மலை அருகே கற்கால கருவி ஒன்றை கல்வெட்டு பயிலரங்கத்தில் கலந்து கொண்ட விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இம்மானுவேல் கண்டறிந்தார். இதனை ஆய்வு செய்ததில் அவை பழைய கற்கால கருவி என தெரியவந்தது என அவர் தெரிவித்தார்.
குடைவரைக்கு பின் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகளும் உள்ளன எனவே இந்த ஆதாரங்கள் மூலம் அப்பகுதியில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது என்று கூறினார்.