தமிழகத்தில் கரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் கரோனா சிறப்பு மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "தமிழகத்தில் கரோனா நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான வசதிகளை உள்ளடக்கியது. அனைத்து முன்னணி மருத்துவமனைகளில் உள்ள வசதிகளும் இந்த சிறப்பு மையத்தில் உள்ளது. தமிழகத்தில் கரோனா சமூக பரவல் இதுவரை ஏற்படவில்லை. நான் பலமுறை கூறியிருக்கின்றேன், சமூக பரவல் இருந்திருந்தால் நீங்களும் நானும் இங்கே பேச முடியாது. தமிழகத்தில் சமூக பரவல் என்ற பேச்சே எழவில்லை. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கரோனாவை கட்டுப்படுத்தலாம். மருத்துவ நிபுணர்கள் கூறும் அனைத்து வழிமுறைகளையும் தமிழக அரசு பின்பற்றி வருகின்றது. தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களின் முழு ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கரோனாவை ஒழிக்க அதுமட்டுமே தற்போதைய தேவையாக இருக்கின்றது" என்றார்.