முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் குடமுழுக்கு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று தைப்பூச தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தினமும் ஏறத்தாழ 10 ஆயிரம் பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தற்போது குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் தைப்பூச நாளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.
பழனி அடிவாரத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முடி காணிக்கை செலுத்துவது முற்றிலும் இலவசம். ஆனால் இங்கு மொட்டை அடிப்பவர்கள் ஒரு ஆளுக்கு 50 ரூபாய் தந்தால் தான் மொட்டை அடிப்போம் என அடாவடியாகப் பேசுவதாக பக்தர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. வசதியானவர்களாக இருந்தால் 200 ரூபாய், 300 ரூபாய் தர வேண்டும் என முன்கூட்டியே பேசிக்கொண்ட பின்பே மொட்டை அடிக்கிறார்கள் என்கிறார்கள். லஞ்சம் வாங்குவது சட்டப்படி தவறு. லஞ்சம் கேட்டால் புகார் சொல்லுங்கள் என அங்கு தொலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ளது கோவில் நிர்வாகம். இதுகுறித்து புகார் சொல்ல யாராவது போன் செய்தாலும் எடுப்பதில்லையாம். கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர் மொட்டை அடிக்க வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்குகிறார். இதனை அவர் கண்காணித்து அதிகாரிகளிடம் கூறவேண்டும், அவர்களும் கூறுவதில்லை என்கிறார்கள் பக்தர்கள்.
பழனி கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களைப் போல அதிக அளவில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மொட்டை அடித்துக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என்றே நினைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களிடம் கூடுதலாகவே பணம் வசூலிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் மட்டும் அல்லாமல் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களிடமும் அங்குள்ள இடைத்தரகர்கள் வேகமாக தரிசனம் செய்ய வைக்கிறோம் எனச் சொல்லி குறுக்கு வழியில் அழைத்துச் சென்று அதிக அளவில் பணம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் பழனிக்கு சென்று வரும் பக்தர்கள். இதனால் கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் வராமல் போகிறது என்கிறார்கள் முருக பக்தர்கள்.