![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/eBnt7Ra5rEVyy7E86ErB9eMpeL4gbbc3NNGx9QAAYhM/1580825757/sites/default/files/2020-02/sfdfdfdfd1212.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/iBj9dkoppcIecLdmJhMVzUu1m85YWLrSU_5MSrIvCSI/1580825757/sites/default/files/2020-02/fgfghghgh6775.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/A5nl9yl-n-gWQt34-F3mCqYBPGmwKnXzlC7bBQu0NAc/1580825757/sites/default/files/2020-02/ghghghghgghrutyu.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/sRAieOLKJuW2YV9w07rlYUcJMAlDStjKEcPnjHUO5bE/1580825757/sites/default/files/2020-02/fgfghfhfhhghg.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-EqDCE9Gca815tqEQsuKE1DKx45gNewRDUVOoGHAfeQ/1580825758/sites/default/files/2020-02/thghhghjhj.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/653YSOh6i-yWoe3Z1byXzsHVxqEjgog_hkk8ENMRytQ/1580825758/sites/default/files/2020-02/fdhgfhhggh6767.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KQAFNmdxivceP7WVZxggxtQy2vxmUt887tBOuIDlevs/1580825758/sites/default/files/2020-02/r5t6tyty.jpg)
![Paintings that take you to Cholakalai ...Kumbakonam Gavin College Students!](http://image.nakkheeran.in/cdn/farfuture/VUcFNAUXCnLajJnrKIpToH2YvqF0OFWvZfjKkO9HMts/1580825758/sites/default/files/2020-02/sdfdfdfddf343434.jpg)
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கால் விழாவால் ஜொலித்துக்கொண்டிருக்கும் மாநகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் தத்ரூபமாக வரைந்திருக்கும் வரலாற்று பின்னனியுடைய படங்கள் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக வரலாற்று சின்னமாம் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5 ம் தேதி காலை நடக்க இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், தன்னார்வலர்களும், மாணவர்களும், ஆன்மிகவாதிகளும் செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் கவின் கலை கல்லூரி மாணவர்கள் மக்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள நகரின் முக்கிய வீதிகளின் சுவர்கள் முழுவதும் வண்ண மயமான ஓவியங்களை தீட்டி காண்பவர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர்.
ராசராச சோழன், ராசேந்திர சோழன், குந்தவைநாச்சியார், விவசாயிகள், விவசாய முறை, என பலவகையான படங்களை அசலாக வரைந்து, இவர்கள் தான் நம் முன்னோர்கள், நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என்பது போல, இந்த தலைமுறையினருக்கு காட்டி அசத்தியுள்ளனர்.
அதேபோல் தமிழறிஞர்கள், பழங்கால விளையாட்டுகள், ஐந்து வகை நிலங்கள், பெரிய கோயிலை சுற்றி இருக்கும் அகழியின் பழைய வடிவங்கள், நம் முன்னோர்கள் தானியங்களை சேர்த்து வைத்திருந்த மண்பாண்டங்கள், அவர்கள் பயன்படுத்தி,உரல், அம்மி, உலக்கை என அனைத்தையும் தத்ரூபமாக வரைந்து வைத்திருப்பது அந்த கால வாழ்க்கை முறைக்கு இழுத்து செல்கிறது.
சோழர்களின் வரலாற்றை மிக சுருக்கமாக மக்களிடம் கொண்டு சேர்த்த பொன்னியின் செல்வன் வரலாற்று சம்பவங்களை நேரில் பார்த்தது போல ஓவியங்களை வரைந்து அசத்திவிட்டனர். சோழர்களின், தமிழர்களின் வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. இதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்திட வழிவகை செய்யவேண்டும்." என்கிறார் கும்பகோணத்திலிருந்து வந்திருந்த கண்ணன்.
ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ள கும்பகோணம் கவின் கல்லூரி மாணவ மாணவிகளிடம் பேச்சு கொடுத்தோம்," இது எவ்வளவு பெரிய விழா, உலக தமிழர்களே பெருமை கொள்ளும் விழா என்பதால் எங்களுடைய பங்கும் குடமுழுக்கு விழாவில் இருக்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டோம். ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது கலைஞர் எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அப்போது நகர் முழுவதும் குறிப்பாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரிய கோயில் வரை வரலாற்று ஆவணங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதில் மிகவும் பலரையும், குறிப்பாக மாணவர்களையும் கவர்ந்து இழுத்தது மாமன்னன் ராச ராச சோழன் தஞ்சைப்பெருவுடையார் கோயில் கட்டுமான பணிகள் நடப்பதை பார்வையிடுவது போலவும், விவசாய பணிகளை பார்வையிடுவதுபோலவும் வரைந்து அசத்தி இருந்தனர். அதுபோல் வித்தியாசமாக யோசித்தோம், முடிந்தவரை முன்னோர்களின் வாழ்க்கை முறையை வரைந்துள்ளோம்.
துவக்கத்தில் அனைத்து படங்களையும் சாதாரணமாக வரைந்துவிட்டோம், மன்னர்களின் வரலாற்றுப் பின்னணியை வரையும்போது, அவர்களில் காலத்திற்கு சென்று யோசித்து, யோசித்து வரைந்ததால் காலம் எடுத்துக்கொண்டது. அந்தப் படங்களை வரையும் போதே நம்முன்னோர்கள் இப்படியா வாழ்ந்திருப்பார்கள், கலைக்கும் இறை நம்பிக்கைக்கும் இவ்வளவு முக்கியத்தும் கொடுத்திருக்கிறார்களே என நாங்கள் பரவசப்பட்டோம்," என்கிறார்கள் ஆர்வமாக.
கலையையும், இறைபக்தியையும் இருகண்களாக பாவித்து உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருந்துவரும் பெருவுடையார் கோயிலின் வரலாறும், அதன் பெருமையும் இன்னும் பல நூறு ஆண்டுகள் பேசும்.