சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பே வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாகச் சென்று அந்தந்தந்தப் பகுதி திமுக கூட்டணிக் கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.
அதே போல, வெள்ளிக் கிழமை(14.6.2024) ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனுடன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பேசிய அவர், “தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய நல்லாட்சிதான் காரணம். அதே போல என்னைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமை, வெற்றி பெறச் செய்த வாக்காளர்கள், களப்பணியாற்றிய அமைச்சர் மெய்யநாதன், கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் உங்களுக்கு தேவையான என்ன காரியமாக இருந்தாலும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ப.சிதம்பரம் வரவில்லையா...? என்று கேட்க, அதோ.. அங்கே நிற்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கையைக் காட்டிய திசையில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். மகன் கார்த்தி சிதம்பரம் பிரச்சார வாகனமேறி நன்றி கூறிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம் மக்களோடு மக்களாக சாலையில் நின்று பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில் காரில் இருந்தே இறங்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் மகனுக்காக மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று நன்றி சொல்ல வந்துவிட்டு நன்றி அறிவிப்பு பிரச்சார வாகனத்தில் ஏறாமல் ஒதுங்கி நிற்பது ஏன் என்ற கேள்ளி தொகுதி மக்களிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது.