திருச்சி மாவட்டத்தில் இன்று (14.12.2021) நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் 5 திட்டங்களைத் துவக்கிவைத்துள்ளனர். அதில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் உற்றுநோக்கும் மையத்தை திறந்துவைத்தனர். மேலும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவி கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும், குடல் புண் சிகிச்சைக்குப் புதிய மருத்துவ படுக்கைகள் ஆயத்தபடுத்தியதைப் பார்வையிட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழகத்திலேயே முதல் முறையாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் 142.5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு செய்யும் கலன் 2.5 கோடியில் கட்டப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எந்தப் பேரிடர் வந்தாலும் அதனை சமாளிக்கப் போதுமானதாக இந்த சேமிப்பு கலன் பயன்படும்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்தல் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கூடுதலாக தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று தமிழ்நாடு முதல்வரின் முயற்சியால் 1,310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கும் கலன் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 17,940 கான்சன்ரேட்டர்ஸ், 25,560 ஆக்சிஜன் குடுவைகள் பிரதமர் நிதியிலிருந்து கட்டபட்ட 94 ஆக்சிஜன் ஆலைகள் கட்டபட்டுள்ளன.
சிஎஸ்ஆர் பங்களிப்புடன் 94 ஆக்சிஜன் ஆலைகள் கட்டப்பட்டுள்ளன. 241 ஆக்சிஜன் ஆலைகள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்போது 110 பணிகள் முதல்வரால் துவங்கிவைக்கப்பட்டது. அதில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளை உள்நோயாளிகளாக சேர்க்கப்படும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அனைவருக்கும் கட்டாய புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கான மையம் திறக்கப்பட்டு நடைமுறையில் செயல்படுத்த படக்கூடிய திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக படுக்கையில் இருக்கக்கூடிய நோயாளிகளின் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புண் மற்றும் கொப்பளங்களை சரி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பிரத்தியேகமாக வாட்டர் பெட் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அதற்கான திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்ப் பரவல் துவங்கப்பட்ட நாளிலிருந்து நோய் கண்டறியும் சிகிச்சைக்கான ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை அவசியமானதாக மாறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 69 மருத்துவமனைகளில் 79 ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் நோயைக் கண்டறிவதற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. தற்போது கூடுதலாக 2.40 கோடி மதிப்பீட்டில் 20 ஆ.ர்.டி.பி.சி.ஆர். கருவிகள் தமிழ்நாடு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக வழங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் 50 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு என்பது ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் ஒமிக்ரான் பரவலைத் தடுக்க சர்வதேச விமான நிலையங்கள் அனைத்திலும் புதிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாவது தவணை என்ற பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன்பு நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்து சேர்ந்த 47 வயதுடைய பயணிக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டபோது, அவருடைய மரபணுவில் சிறிய மாற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அவர் தற்போது கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருக்கும் சோதனை மேற்கொண்டு அவர்கள் அனைவருடைய மாதிரிகளும் பெங்களூருவில் தற்போது மரபணு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டிருந்த 28 மாதிரிகளில் 4 டெல்டா வைரஸ்தான் என்பது உறுதி செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சோதனை முடிவுகள் வந்த பிறகு அது ஒமிக்ரான் நோய்த் தொற்று என உறுதி செய்யபட்டால் தொடர்ந்து சிகிச்சை அளிப்போம் அல்லது அவர்களை நாங்கள் வீட்டிற்கு அனுப்பிவிடுவோம்” என்று தெரிவித்தார்.