தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை போனசாக வழங்குவது வழக்கம். இதில் சில தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பொருட்களாகவும் தங்களது தீபாவளி போனஸை வழங்குவது வாடிக்கை. அந்த வகையில், கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மோட்டார் சைக்கிளை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அந்தப் பகுதியில் தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி எனப் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிவக்குமார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வருடம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையின் போது விலை உயர்ந்த பரிசைக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய சிவக்குமார், தனது நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு, அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்ட போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டனர். அதனைக் கேட்டுக்கொண்ட சிவக்குமார் அவர்கள் விரும்பும் வாகனங்களை முன்பதிவு செய்து தனது நிறுவனத்திற்கு வரவழைத்துள்ளார்.
அதன் பின்னர் அவர், அந்த 15 ஊழியர்களையும் வரவழைத்து, தீபாவளி பரிசாக மோட்டார் சைக்கிள்களின் சாவிகளை அவர்களிடம் கொடுத்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அத்துடன், அந்த 15 ஊழியர்களுடன் தானும் ஒரு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார். இது தவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையும், போனஸ் தொகையும் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.