Owner of e-service center arrested for tax fraud of Dindigul Corporation

கடந்த மாதம் திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியைக் கையாடல் செய்த விவகாரத்தில் இளநிலை உதவியாளரும் கேசியருமான சரவணன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை செய்ததில் சூப்பிரண்டு சாந்தி மற்றும் மேனேஜர் வில்லியம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், போலியான வங்கி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்த பழனி சாலையில் இ-சேவை மையம் நடத்தி வரும் உரிமையாளர் ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தது வேதாந்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் ராஜா எனத் தெரிந்தது.

இவர் பேருந்து நிலையம் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ரமேஷ் ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இம்மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.கார்த்திகேயன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகரில் தனியார் வங்கியில் வேலை செய்தபோது நகை கையாடலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சூப்பிரணட் சாந்தி மற்றும் மேனேஜர் வில்லியம் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.