Skip to main content

வீட்டைக் காலிசெய்ய மாடிப்படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்!  -பரிதவித்த குடும்பம்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
owner demolished the stairs because he did not vacate the house

காஞ்சிபுரம் வானவில் நகர்ப் பகுதியில்  வசித்த ஒரு குடும்பத்தினர் வீட்டு  வாடகையை முறையாகச் செலுத்தாத நிலையில்,  வீட்டு உரிமையாளர் மாடிப்படிகளை இடித்ததால், அவர்கள்  பல மணி நேரம் வீட்டில் முடங்க  நேரிட்டது.  இதனைத்தொடர்ந்து, அந்தக் குடும்பம் அவசர எண் 100இல் புகார் தெரிவித்ததும், தீயணைப்புத்துறையினரும் காஞ்சிபுரம் தாலுகா  காவல்துறையினரும் இணைந்து அவர்களை  மீட்டனர்.    

owner demolished the stairs because he did not vacate the house

காஞ்சிபுரம் விளக்கடிகோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வானவில் நகர்ப்  பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இங்கு மேல் மாடியில் வேணுகோபால் என்பவர், தனது மனைவி லீலா, தம்பி பாபு, மகள் மகாலட்சுமி மற்றும் அவருடைய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வேணுகோபாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, அந்த வீட்டிலேயே  இருந்து வருகிறார்.  

owner demolished the stairs because he did not vacate the house

இந்நிலையில் பாபு முறையாக வாடகை செலுத்தாததால், அவரை குடியிருப்பில் இருந்து காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் சீனிவாசன் கூறியிருக்கிறார். அதனால் பாபு,  வழக்கறிஞர்  உதவியுடன் வீட்டு உரிமையாளரிடம் பேசி, கால அவகாசம் கேட்டு, கடந்த ஆறு  மாத காலமாக வாடகையைச் செலுத்தாமல் இருந்திருக்கிறார். பலமுறை  கூறியும், வீட்டைக்  காலி செய்ய பாபு மறுத்த நிலையில்,  கட்டுமானப்  பணியாளர்கள் 10 பேருடன் அங்கு வந்த சீனிவாசன், தனது வீட்டின்  மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து, அந்தக் குடும்பத்தினர் வெளியேற முடியாதவாறு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். 

owner demolished the stairs because he did not vacate the house
வேணுகோபால்

நடந்ததைக்  கண்டு அதிர்ச்சியடைந்த அந்தக் குடியிருப்புவாசிகள், அவசர உதவி எண் 100க்கு அழைத்து புகார் தெரிவித்தனர்.  அந்தப் புகாரின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ  இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு, அந்த வீட்டில் இருந்தவர்களை, காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீவிரமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு; பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Armstrong Case; anjalai Delete  from BJP

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 Armstrong Case; anjalai Delete  from BJP

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அஞ்சலையை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திமுக கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்; இரவில் நடந்த பயங்கரம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 youth who tried to steal from the DMK councilor house was arrested and handed over police

ஈரோடு பெரியசேமூர், ஈ.பி.பி நகர், பி.பி.கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஈரோடு மாணிக்கம் பாளையம் சாலை, பாலாஜி பேக்கரி பின்புறம் வசிக்கும் மூத்த மகள் கனிமொழியை அவரது வீட்டில் பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முதல் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.

வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட ஜெகதீசன் இது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் தகவல் தெரிவித்தார். அந்தப் பகுதி மக்கள் ஒன்று கூடி அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜெகதீசன் வீட்டிலிருந்து ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அந்த நபரை ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம், அம்பேத்கர் முதல் தெருவை சேர்ந்த குமார் (33) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.