கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அனைத்து கட்சி சார்பில் பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர் பாலு உள்ளிட்ட தேமுதிகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் தணிகை தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உத்திராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி சேகர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதில் கலந்து கொண்டவர்கள் விஜயகாந்த் வாழும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொண்டார். பொதுமக்களின் பல்வேறு குறைபாடு குறித்து அவர் செய்த உதவிகள், திரைப்படத்துறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வாறு நாணயமாக நடந்து கொண்டார் என்பது குறித்து பேசினார்கள். இதில் அவர் அன்னதானத்தை முழுமூச்சாக செய்தது அனைத்து மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தும் அவரது புகழ் மறையாமல் இருப்பதற்கு வாழும் காலத்தில் நடந்து கொண்டவிதம் என்று குறிப்பிட்டனர்.
முன்னதாக பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக இரங்கல் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சென்றனர். இது பண்ருட்டி பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.