சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.