ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் ஆறாவது முறையாக சிட்டிங் எம்.எல். ஏ.சக்கரபாணி களம் இறங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் நடராஜன், தே.மு.தி.க. வேட்பாளர் சிவகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சக்திதேவி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அப்துல்ஹரி ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.
தி.மு.க.
தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சிட்டிங் எம்எல்ஏவான சக்கரபாணி தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்று தொகுதியைத் தக்க வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதிலும் இடம்பிடித்து வருகிறார். அதோடு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நகரம் முதல் பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது சக்கரபாணிக்குப் பெரும் பலமாக இருந்து வருகிறது. அதுபோல் புயலால் மக்காச்சோளம், வாழை உள்பட விவசாயப் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வாங்கிக் கொடுத்தார். அதுபோல் தொகுதியில் விளையக்கூடிய கண்வலிக் கிழங்கை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தொகுதியிலுள்ள விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார். அதன்மூலம் விவசாய மக்களிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். அதுவும் பலமாக இருந்து வருகிறது. அதோடு கரோனா காலத்தில் கட்சிப் பாகுபாடு பார்க்காமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்துள்ளார்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள நடராஜனை, கட்சிக் காரர்களுக்கு பெரும்பாலும் தெரியாது. அதுபோல் தொகுதி மக்களிடம் பெரிய அறிமுகமில்லாததும் நடராஜனுக்கு பலவீனத்தைக் காட்டி வருகிறது. அதோடு சீட் கிடைக்காத பொறுப்பாளர்கள், பெயரளவில் தொகுதியில் வலம் வருவதும் பலவீனத்தைக் காட்டுகிறது. இருந்தாலும் கட்சி ஓட்டுடன், அமைச்சர் சீனியின் ஆதரவாளர் என்ற பெயரில்தான் தொகுதியில் வலம் வருகிறார்.
தே.மு.தி.க.
இத்தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவகுமாருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரு கணிசமான ஓட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளராகவும் சேர்மனாக இருந்த நல்லசாமி டி.டி.வி. அணிக்கு தாவியதின் பேரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பதால், அதன்மூலம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் தேமுதிக கணிசமான ஓட்டுகளை வாங்க இருக்கிறது. அந்த ஓட்டுகள் அதிமுகவுக்கு விழக்கூடிய ஓட்டுகள் என்பதால் அதன் மூலம் நடராஜனுக்கு மேலும் ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது. அதுபோல் தேர்தல் களத்திலும் தேமுதிக கூட்டணி பலத்துடன் வளம் வருகிறது.