கரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டறியவும், சந்தேகத்திற்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்துவதோடு, நகரில் தடுப்புப்பணியாகக் கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து நடக்கிற பணிகள் தீவிரமெடுத்துள்ளன. மேலும் மக்களுக்கு மருந்து உபகரணங்கள் உரிய விலைகளில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள், கண்காணிக்கிற பணிகளை மேற்கொண்டிருக்கும் நெல்லை கலெக்டர் ஷில்பா, பாளையில் கூடுதல் விலைக்கு முகக் கவசம் விற்பனை செய்த மருந்துக்கடை ஒன்றிற்கு சீல் வைத்தார். அவைகள் பதுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை என்றிருக்கிறார்.
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த சில நாட்கள் முன் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளோடு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரிடம் நடத்திய விசாரணையி்ல் அவர் துபாயில் இருந்ததும், பின்னர் நெல்லை வந்து தங்கியிருந்ததும், ராதாபுரம் சென்றதும் தெரிய வந்தது.
மருத்துவக் குழுவினரின் விசாரணையில் அவர், நெல்லை வண்ணார்பேட்டையில் ஒரு லாட்ஜில் 3க்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்தது தெரிந்தது. மேலும் வள்ளியூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது, நாங்குநேரியில் ஏடிஎம் மையத்தில் பணமெடுத்தது உள்ளிட்ட பல்வேறு விபரங்களைத் தெரிவித்துள்ளார். அவர் எங்கெங்கு சென்றார், எங்கு தங்கியிருந்தார் உள்ளிட்ட விபரங்களை டாக்டர்கள் வாய்மொழியாக கேட்டறிந்தனர். அதன்படி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. கரோனா பாதித்த நபர் தங்கியிருந்த காரணத்தால் அந்த லாட்ஜ் முற்றிலுமாக சுத்தப்படுத்த வேண்டும் என்பதால், அதை வரும் ஏப். 20ம் தேதி வரை மூட உத்தரவிட்டனர். லாட்ஜை ஒட்டியுள்ள ஓட்டலும் மூடப்பட்டது.