Skip to main content

“நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது..” - ஓ.பி.எஸ்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
OPS Statement on bus strike

“வேலை நிறுத்தம் நீடித்தால் பேருந்துக் கட்டணம் என்பது விமானக் கட்டணத்தைவிட உயரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாகவே, ஒவ்வோர் ஆண்டும் குடும்பத்தினருடனும், கிராமத்தினருடனும் இணைந்து பண்டிகைகளைக் கொண்டாடலாம் என்ற எண்ணத்தில், பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகளை முன்னிட்டு கூடுதலாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து, நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வது என்பது இயல்பான ஒன்று. இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவதும், இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதும், அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த நிலையில், ஊதியக் குழு பேச்சுவார்த்தை, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தற்போது மேற்கொண்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 60 விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை. இதன் விளைவாக, பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர், பெண்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகளில் ஏற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலை பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும். 

உள்ளூர் பேருந்துகளில் இந்த நிலைமை என்றால், வெளியூர் பேருந்துகளில் நிலைமை வேறாக உள்ளது. பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு 12-01-2024 முதல் பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போதே 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்போதே இந்த நிலை என்றால், பொங்கல் பண்டிகையை ஒட்டி வசூலிக்கப்படும் கட்டணத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. 

ஒருவேளை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேலை நிறுத்தம் நீடித்தால், பேருந்துக் கட்டணம் என்பது விமானக் கட்டணத்தைவிட உயரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது.

மக்களின் அச்சத்தினை போக்கும் வகையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்