Skip to main content

“சாலை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” - ஓ.பி.எஸ் வேண்டுகோள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

OPS request our government to complete the road construction work quickly

 

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் வேளாண் வளர்ச்சியிலும், தொழில் முன்னேற்றத்திலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதிலும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதிலும், பயண நேரத்தினை குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுவது சாலைக் கட்டமைப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சாலைக் கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில், சிறந்த சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பது, புதிய சாலைகளை அமைப்பது, ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவது ஆகியவற்றை முனைப்புடன் செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உண்டு. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதைப் பார்க்கும்போது, இந்தப் பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

 

உதாரணமாக, சென்னை மணப்பாக்கம் நெடுஞ்சாலை என்பது ராமாபுரத்தையும் - குன்றத்தூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாகும். கிட்டதட்ட 8 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதிகள் பாதாள சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாகவும், ஓராண்டிற்கும் மேல் இப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக, இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்த பகுதிகளில்கூட சாலைகள் போடப்படவில்லை என்றும், இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வது அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து என்றும், இந்தச் சாலையில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள் வர மறுக்கின்றனர் என்றும், அப்படி வந்தாலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உயிரைப் பணயம் வைத்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களும், அப்பகுதி வழியாக செல்பவர்களும் தெரிவிக்கின்றனர்.

 

இது தவிர, பெரும்பாலான இடங்களில் புதிய தார்ச் சாலை போடுவதற்காக சாலையின் மேற்பரப்புகள் அகற்றப்படுகின்றன. முகப்பேரிலுள்ள பாரி சாலை, ஜமாலியாவிலுள்ள ஹைடர் கார்டன் தெரு, மயிலாப்பூர் பி.எஸ். சிவசாமி சாலை, மணப்பாக்கத்தில் உள் புறத்தில் உள்ள சாலைகள் உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் மேற்பரப்புகள் அகற்றப்பட்டு பல நாட்களாகியும் புதிய தார்ச் சாலை போடப்படாத நிலை நிலவுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதற்குக் காரணம் ஆட்கள் மற்றும் இயந்திரங்களை குறித்த நேரத்தில் ஒப்பந்ததாரர்களால் எடுத்துவர இயலவில்லை என்று கூறப்படுகிறது.

 

மேலும், ஒரே ஒப்பந்ததாரர் சாலைகளுக்கான பல ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் காரணமாக, இயந்திரங்களின் வாடகையினை சேமிக்கும் வகையில், முதலில் சாலைகளின் மேற்பரப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வதாகவும், அவர்களிடம் புதிய சாலையைப் போடுவதற்கான இயந்திரங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இருப்பதால் புதிய சாலைகள் போடுவதில் தொய்வு ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஓரிரு இயந்திரங்களை வைத்துக் கொண்டு பல சாலைகளுக்கான பணிகளை ஒரே ஒப்பந்தக்காரர் மேற்கொள்ளும்போது இது போன்ற தாமதங்கள் ஏற்படுகின்றன.

 

ஒப்பந்தப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கும் முன்பே அவர்களிடம் போதுமான ஆட்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ளனவா என்பதையறிந்து கொண்டு ஒப்பந்தங்களை அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் காரணமாக சாலைப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மக்களும், வாகன ஓட்டிகளும்தான். மக்களின் சிரமங்களை வெகுவாக குறைக்கும் வகையில், ஒரு சாலைப் பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும்போது, ஒவ்வொரு பணியும் குறித்த காலத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

 

அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விரைந்து முடிக்கவும், மணப்பாக்கம் நெடுஞ்சாலையை உடனடியாக சீர்செய்யவும் முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அப்போதே சீப் ஏஜென்ட் ஓபிஎஸ்தான்' - எடப்பாடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
'That's when the cheap agent became an ops' - Interesting information shared by Edappadi

'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.

ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.

Next Story

கேள்விக்குறியாகும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு? - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Drivers are at risk of getting into an accident due to cattle lying on  road

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் கால்நடை வைத்திருப்பவர்கள் காலையில் அவைகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இது காய்கறி கடைகள், பூக்கடைகள் உட்பட எல்லா இடங்களிலும் பொருட்களை சாப்பிடுகின்றன. மதிய நேரத்தில் அதன் உரிமையாளர்கள் வந்து பால் கறக்கும் மாடுகளில் சாலையிலேயே அமர்ந்து பால் கறந்துக்கொண்டு மீண்டும் அங்கேயே விட்டுவிடுகின்றனர். 

சாலையில் சுற்றி திரியும் இந்த கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வி.கோட்டா, பேரணாம்பட்டு சாலையில் கால்நடைகள் சாலையிலே ஹாயாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய  வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்கள் மாடுகள் மீது மோதி பலர் கீழே விழுந்து கை, கால்களில் சிராய்ப்பு, என பல பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். இதுக்குறித்து நகராட்சிக்கு, காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Drivers are at risk of getting into an accident due to cattle lying on  road

பெரியதாக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகள் சாலைக்கு வராமல் தடுத்து நடவடிக்கை எடுக்கும்படி பேரணாம்பட்டு பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர். கால்நடைகளை சாலையில் ஓட்டி விடும்  உரிமையாளர்களுக்கு அபராதமும் மீண்டும் மீண்டும் அப்படி செய்தால் மாடுகள் பிடித்து வைத்து நகராட்சி ஏலம் விடப்படும் என்கிற விதிகள் இருந்தாலும் நகராட்சி அலுவலர்கள் இதை நடைமுறைப்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.