இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை மீண்டும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவுதல் போன்ற அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சொந்த மாவட்டமான தஞ்சை சென்றிருந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை அன்று வைத்திலிங்கம் மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது முதல் அவருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்று இருந்துள்ளது. இதையடுத்து, கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட வைத்திலிங்கத்துக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியது. அதைத் தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்தி தகவல் கூறுகின்றனர்.
இந்த நிலையில், வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை நாம் விசாரித்த போது, "இந்த தகவல் தவறானது; அவர் கரோனா தொற்று இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது.